"அபுதாபி இளவரசர்.." டெல்லி ஹோட்டலில் உல்லாச வாழ்க்கை.. கர்நாடக இளைஞரை தூக்கிய போலீஸ்! ஷாக் பின்னணி
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியை ஏமாற்றிவிட்டு கம்பி நீட்டிய நபரை டெல்லி போலீசார் இப்போது கர்நாடகாவில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் காலத்திற்கு ஏற்ப பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனிடையே தலைநகர் டெல்லியில் புகழ்பெற்ற 5 நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களை ஏமாற்றி ரூபாய் 23 லட்சம் பில்லுடன் கம்பி நீட்டியுள்ளார் ஒரு நபர். அவர் என்ன செய்தார்.. அவரை போலீஸ் எப்படிப் பிடித்தனர் என்பதை பார்க்கலாம்.

அபுதாபி அரசு குடும்பம்
தலைநகர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருவர் சென்றுள்ளார். தன்னை அபுதாபி நாட்டின் அரசு குடும்பத்தைச் சேர்ந்த நபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், , அபுதாபி அரச குடும்பத்தின் ஷேக் ஃபலாஹ் பின் சயீத் அல் நஹ்யானின் நெருங்கிய நண்பன் என்று கூறியுள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளதாகவும் கூறிய அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களைக் கொடுத்துள்ளார்.

கம்பி நீட்டிய இளைஞர்
இதையெல்லாம் பார்த்த விடுதி நிர்வாகத்தினர் அவர் சொல்வது உண்மை என்று நம்பிவிட்டனர். அவருக்கு ரூம் நம்பர் 427ஐ கொடுத்துள்ளனர். அங்கு தங்கிய போது, அபுதாபியில் எப்படி இருக்கும் தெரியுமா என்ற ரேஞ்சில் ஊழியர்களிடம் கதைகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார். இதனால் வருக்குக்குப் பெரியளவில் சந்தேகம் வரவில்லை.. கடந்த 4 மாதங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அந்த நபர், கடந்த நவ.20ஆம் தேதி சத்தமில்லாமல் விடுதியை விட்டு கம்பி நீட்டிவிட்டார்.

மாயம்
நான்கு மாதங்களில் ஹோட்டலில் தங்கியதற்கு ரூ 35 லட்சம் ஆன நிலையில், 11.5 லட்சத்தை மட்டுமே செலுத்திவிட்டு, மாயமாகியுள்ளார். மீத தொகைக்குக் காசோலை கொடுத்த போதும் வங்கியில் பணம் இல்லை எனத் திரும்பி வந்துவிட்டது. அதன் பிறகு, அவரை ஹோட்டல் நிர்வாகத்தால் தொடர்பும் கொள்ள முடியவில்லை.. இதன் பின்னரே தங்களை அவர் ஏமாற்றியதை உணர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

கைது
ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், ஹோட்டல் நிர்வாகத்தை ஏமாற்றி அந்த நபரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். அந்த நபர் கர்நாடகாவின் தக்ஷின் கர்நாடகாவை சேர்ந்த மஹமது ஷெரீப் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தான் போலியான ஆவணங்களை வைத்து லீலா பேலஸ் ஹோட்டலை ஏமாற்றியுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்
ஹோட்டல் நிர்வாகத்திற்கு 23 லட்சம் பில் செலுத்தாமல் காலி செய்துள்ளார். மேலும், அங்கிருந்து கிளம்பும்போது பல விலையுயர்ந்த பொருட்களையும் இவர் எடுத்து வந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இவரைக் கடந்த ஜனவரி 19ஆம் தேதி தக்ஷின் கர்நாடகாவில் இருந்து போலீசார் கைது செய்த நிலையில், அவர் இப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விரிவான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீசார் நடவடிக்கை
மஹமது ஷெரீபை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். லீலா பேலஸில் இருக்கும் பல சிசிடிவி கேமராக்களில் அவர் தங்கியிருந்தது தெளிவாகப் பதிவாகியுள்ளதால், அவர் மீதான விசாரணையைத் தீவிரப்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். மேலும், அவர் இதேபோல வேறு எதாவது ஹோட்டலிலும் மோசடி செய்துள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications