"50 சீட்கள் தான்.." 2024இல் பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை! சசி தரூர் சொல்லும் காரணம்! என்னென்னு பாருங்க
டெல்லி: அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் மேல் இருக்கும் போதிலும் இப்போதே தேர்தல் குறித்த பேச்சு அதிகரித்துவிட்டது. இந்தச் சூழலில் அடுத்து வரும் மக்களவை தேர்தல் குறித்து காங்கிரசின் சசி தரூர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்தாண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் கூட.. இப்போதே தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பேச்சுகள் கிளம்பிவிட்டன.
அதற்கு முன்பு, இந்தாண்டே பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற உள்ளதால் அதிலும் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், நாட்டில் அப்போது பாஜகவுக்கு ஆதிக்கம் இருந்தாலும் ஒப்புக் கொண்டாலும்.. அதே வேளையில், அவர்கள் பல மாநிலங்களை இழந்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், இதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் நாடாளுமன்றத்திலும் கூட தோல்வியைத் தழுவலாம் என்றார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைப் போல ஒன்றை அவர்களால் நிச்சயம் அடுத்த தேர்தலில் அடைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சசி தரூர்
அந்த நிகழ்ச்சியில் பேசிய திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், "2019இல் பாஜக எப்படி இந்தளவுக்குப் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பதைப் பார்த்தால்.. அவர்கள் ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் வென்றனர். பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் மாநிலங்களில் ஒரு இடம் தவிர அனைத்து இடங்களிலும் வென்றனர். அதேபோல மேற்கு வங்கத்திலும் 18 இடங்களைக் கைப்பற்றினர். அவர்களால் நிச்சயம் இதுபோன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற முடியாது. அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் அவர்கள் பெரும்பான்மையை இழக்கவும் வாய்ப்புகள் அதிகம்..

50 இடங்கள்
2019இல் அவர்கள் பெற்ற வெற்றியை மீண்டும் பெறவே முடியாது.. இதனால் 2024இல் பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது. 2019 தேர்தல் சமயத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல், கடைசி நிமிடத்தில் ஒரு மிகப்பெரிய அலைக்கு வழிவகுத்தது.. இவை எல்லாம் 2024இல் மீண்டும் நடக்காத ஒரு வினோதம்.. அடுத்து வரும் தேர்தலில் அவர்கள் குறைந்தது 50 சீட்களை இழப்பார்கள். இந்த இடங்களில் எதிர்க்கட்சிகள் வெல்ல வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது" என்றார்.

பாஜக வெல்ல முடியாது
இருப்பினும், எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதே பாஜக மீண்டும் மீண்டும் வெல்லக் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்ளுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதை இப்போது சொல்ல முடியாது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பாஜக 250 இடங்களில் வெற்றி பெற்றால்.. மற்றவர்கள் 290 இடங்கள் வரை பெற வாய்ப்பு இருக்கிறது. இப்படி நடக்குமா அல்லது இங்கொன்றும் அங்கொன்றுமாக சில இடங்களில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்" என்றார்.

வாரிசு அரசியல்
தொடர்ந்து இந்தியா இப்போது சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், "வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்திற்குச் சவால் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்த விவகாரத்தில் பலரும் காங்கிரஸை மட்டுமே குறை சொல்கிறார்கள். நீங்கள் இதில் மற்ற கட்சிகளையும் பார்க்க வேண்டும். அரசியலில் நேர் எதிரே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பாஜக தவிர, ஒவ்வொரு கட்சியிலும் வாரிசு அரசியல் உள்ளது. அதை நம்மால் தவிர்க்கவே முடியாது. எனவே காங்கிரஸில் மட்டும் வாரிசு அரசியல் உள்ளதாகச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எல்லா கட்சிகளிலும்
முலாயம் சிங் அதன் பிறகு அவரது மகன்... லாலு பிரசாத் யாதவ் அதன் பிறகு அவரது மகன்.. கருணாநிதிக்குப் பிறகு கருணாநிதி மகன், பால் தாக்கரேவுக்குப் பிறகு அவரது மகன் உத்தவ் தாக்கரே ஆகியோர் பதவியேற்றனர்... சரத் பவார் கட்சியிலும் கிட்டத்தட்ட அதே நிலை தான். அங்கு அவரது மகளும் மருமகனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இது இந்தியாவில் எல்லா கட்சிகளிலும் இருக்கும் பிரச்சினை" என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
