"வெறும் 125 பேர்..!" உலகமே அழிய இவர்கள் தான் காரணம்.. அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா! பகீர்
டெல்லி: பருவநிலை மாற்றம் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இதற்கு யார் காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
பருவநிலை மாற்றம் என்பது இப்போது முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்து உள்ளது. பருவம் தவறிப் பெய்யும் மழை, சுட்டெரிக்கும் வெயில் அனைத்து நாடுகளிலும் தலைவலியாக உள்ளது.
அதுவும் சமீப ஆண்டுகளில் இந்த பருவநிலை மாற்றப் பாதிப்புகள் கணிசமாகவே அதிகரித்து உள்ளது. உலக நாடுகள் இணைந்தால் மட்டுமே இந்த பிரச்சினையைச் சரி செய்ய முடியும் என்பது உலக நாடுகளின் கருத்து.

ஐநா மாநாடு
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐநா பருவநிலை நாடு நடைபெறுகிறது. இந்தாண்டு எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது. மொத்தம் 198 நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இதில் கலந்து கொண்டு உள்ளனர், இதற்கிடையே பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

125 பேர்
அதில் சராசரி மனிதனை விட பணக்காரர்களே பருவநிலை மாற்றத்திற்கு அதிகமாகக் காரணமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உலகின் டாப் 125 பணக்காரர்களின் முதலீடுகள் என்பது ஆண்டுக்குச் சராசரியாக 30 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்குக் காரமாக உள்ளது. இதர 90% பேர் தினசரி வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவை விட இத பல லட்சம் மடங்கு அதிகமாகும்.

ரொம்பவே மோசம்
இந்த 125 பெரும் பணக்காரர்கள் மட்டும் 183 நிறுவனங்களில் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளனர். எரிபொருள்கள் மற்றும் சிமென்ட் போன்ற மாசுபடுத்தும் தொழில்களில் அவர்கள் செய்துள்ள முதலீடுகள் அடுத்த 500 நிறுவனங்களால் ஏற்படும் மாசை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று அதிர்ச்சி தகவலும் அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டிற்கு இணையாக
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்த 125 பெரும் பணக்காரர்கள் தான் ஆண்டுக்கு 393 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேர காரணமாக உள்ளனர். இது 6.7 கோடி மக்கள் வசிக்கும் பிரான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்துக்குச் சமமாகும். 1.6 கோடி முறை இந்த உலகத்தை விமானம் மூலம் சுற்றி வந்தால் எவ்வளவு மாசு ஆகுமே அதே இந்த 125 பேர் செய்கிறார்கள்.

அதிக நிதி தரணும்
இது தொடர்பாக ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் கூறுகையில், "பெரும் பணக்காரர்களால் தான் அதிக மாசு ஏற்படுகிறது. எனவே, அதைச் சரி செய்யும் கூடுதல் பொறுப்பும் அவர்களையே சேரும். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இந்த பெரும் பணக்காரர்கள் அதிக நிதியை அளிக்க வேண்டும். பல ஆண்டுகளாக இதைச் செய்யாமல் இவர்கள் தப்பித்து வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

ஜீரோ நெட் கார்பன் எமிஷன்
ஒவ்வொரு ஆண்டு பருவநிலை மாற்றத்தின் போது, ஏகப்பட்ட வாக்குறுதிகளை உலக நாடுகள் அள்ளி வீசும். ஆனால், உண்மையில் அதை ஒன்றைக் கூட அவர்கள் நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் திசைதிருப்பும் வகையில், இந்த உலக நாடுகள் எப்போதும் நெட் ஜீரோ கார்பன் எமிஷன் என்பதைப் பேசும். இதுவும் ஒரு திசைதிருப்பும் நடவடிக்கை தான் என்று ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

அதிக நிதி தேவை
பருவநிலை மாற்றப் பாதிப்புகளைச் சமாளிக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். வெறும் பூமியை மட்டுமே பயன்படுத்தி உலகின் கார்பன் உமிழ்வை நெட் ஜீரோ ஆக்க வேண்டும் என்றால் நாம் குறைந்தபட்சம் 160 கோடி ஹெக்டேர் அளவுக்கு புதிய காடுகளை உருவாக்க வேண்டும். இது கிட்டதட்ட இந்தியாவின் நிலப்பரப்பைப் போலவே 5 மடங்காகும். பருவநிலை மாற்றத்துக்குக் காரணமாக உள்ள பெரும் பணக்காரர்கள் அதிக நிதி அளித்தால் மட்டுமே அதை எதிர்த்துப் போராட முடியும்.












Click it and Unblock the Notifications