கொரோனா: பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஆரோக்கிய சேது ஆப் மூலம் எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்?
டெல்லி: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக ஆரோக்கிய சேது ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க பூஸ்டர் கோவிட் 19 தடுப்பூசிகள் போடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தனியார் அல்லது அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற முடியும். அப்படி இல்லை எனில் ஆரோக்கிய சேது எனும் ஆப் மூலமாகவும் நாம் புக் செய்து கொள்ள முடியும்.
இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி, ஆரோக்கிய சேது என்னும் கைபேசி செயலியைத் தொடங்கியது நமது நாடு. இந்தச் செயலி, கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், தொற்று தொடர்பைக் கண்டறிதல், பாதிப்பு அதிகமான பகுதிகளை வரையறுத்துல், கொவிட்-19 பற்றிய உரிய தகவல்களைப் பரப்புதல் ஆகிய நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டது. இந்தியாவின் கொள்கையின்படி ஆரோக்கிய சேது வெளிப்படைத் தன்மையுடனும், அந்தரங்கத் தகவல்கள் பாதுகாப்பையும் கொண்டது. திறந்தநிலை மென்பொருள் ஆதாரம் என்னும் இந்திய கொள்கைக்கு ஏற்ப, ஆரோக்கிய சேதுவின் ஆதாரக்குறியீடு தற்போது திறந்தநிலை ஆதாரமாக உருவாக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கொண்டது ஆரோக்கிய சேது ஆப். இந்த ஆரோக்கிய சேது ஆப் மூலமாக கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும். பூஸ்டர் தடுப்பூசிக்குதான் என்றில்லாமல் 1-வது, 2-வது கொரோனா தடுப்பூசிகளைப் போடுவதற்கும் ஆரோக்கிய சேது ஆப்பை பயன்படுத்தலாம்.
ஆரோக்கிய சேது ஆப்பை நீங்கள் பயன்படுத்தும் போது கையில் ஆதார் எண்ணை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆதார் எண்ணுடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்கவும் வேண்டும். ஆரோக்கிய சேது ஆப்-ஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் அல்லது ஐபோனில் டவுன்லோடு செய்து ஆதார் எண்ணில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலமாக லாகின் செய்ய வேண்டும்.
ஆரோக்கிய சேது ஆப்-க்குள் நுழைந்துவிட்டால் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற முடியும். பூஸ்டர் தடுப்பூசியை எந்த தேதியில் போடுவது என முன்பதிவு செய்ய முடியும்.
ஆரோக்கிய சேது ஆப்பில் பூஸ்டர் தடுப்பூசி ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பணம் செலுத்தியோ அல்லது இலவசமாகவோ இந்த தடுப்பூசியை பெறுவதற்கான ஆப்சன்களும் இடம்பெற்றிருக்கும். அதற்கு அடுத்ததாக எந்த மாநிலம், எந்த மாவட்டம், உங்கள் பின்கோடு பதிவிட்டு தடுப்பூசி மையங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
கொரோனா தடுப்புக்கான கோவிட் 19 பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசமாகவே நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் போடப்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு நேரடியாகவே சென்று தடுப்பூசி போடலாம். அல்லது கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக செல்லலாம். ஆரோக்கிய சேது ஆப் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும் என்பது இல்லை. அப்படி கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போட செல்லும் போது ஆதார் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுதல் அவசியமாகும். ஆரோக்கிய சேது ஆப் மூலம் உங்களுடைய கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications