மணிப்பூர்: ஆயுத படை சட்டத்தை வாபஸ் பெறக் கோரி உக்கிர போராட்டம்- குக்கிகளுக்கு ஆதரவாக மிசோரம்!
டெல்லி: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். மேலும் மணிப்பூர் குக்கி சோ பழங்குடிகளுக்கு தனி சுயாட்சி நிர்வாக அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று மிசோரம் மாநில அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பதும் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனப் பழங்குடிகளிடையேயான மோதல் ஆண்டுக்கணக்கில் நீடித்து வருகிறது. பல நூறு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக சொந்த நிலத்திலேயே நிலம் பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் இப்போது ஆயுத கிளர்ச்சியாக உருமாறியுள்ளது. குக்கி இனப் பழங்குடிகள் தங்களுக்கு தனியான சுயாட்சி நிர்வாக கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று இந்த ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது இனப்படுகொலையாகவும் உருமாறிக் கொண்டிருக்கிறது. அண்மையில் மைத்தேயி இன மக்கள் 6 பேரை கொடூரமாக குக்கிகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர். இதற்கு மணிப்பூர் மாநில அரசே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்பாலில் நேற்று நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
இதனிடையே மணிப்பூரில் குக்கி இன பழங்குடிகளுக்கு சுயாட்சி கவுன்சில் வழங்க வேண்டும் என மிசோரம் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மணிப்பூர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் மிசோரம் அரசியல் தலைவர்கள் தலையிடக் கூடாது என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குக்கி சோ பழங்குடிகளும் மிசோ பழங்குடிகளும் தொப்புள் கொடி உறவுகள் என்பதால் நாங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் என்கின்றனர் மிசோரம் அரசியல் தலைவர்கள். இதனால் மணிப்பூர்- மிசோரம் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications