லாட்டரியில் அடித்த எதிர்பாராத திருப்பம்.. ரூ.240 கோடி கிடைத்தும் இந்திய இளைஞர் எடுத்த முடிவு!
ஐதராபாத்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த அனில் குமார் என்ற இந்திய நபருக்கு கனவில் கூட யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.240 கோடி லாட்டரியில் பரிசாக அடித்துள்ளது. இதனால் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்ற அனில் குமார் தற்போது இந்த பணத்தை எப்படி செலவு செய்வது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதே சமயம் தொடர்ந்து வேலை செய்யப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகிறார்கள். டிரைவர், பொறியியல் பட்டதாரிகள், கட்டுமான தொழில் என பல்வேறு பணிகளிலும் இந்தியர்கள் பலரும் பணியாற்றி வருகிறார்கள். எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து சொந்த ஊரில் இருக்கும் நம் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கனவுடன் கடல் கடந்து செல்லும் சிலருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நேரம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு திருப்பம் நடந்து விடுகிறது.

லாட்டரியில் ரூ.240 கோடி பரிசு
குறிப்பாக லாட்டரியில் பணம் அடித்து சிலர் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிடுவதை பார்க்கிறோம். இப்படித்தான் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய இளைஞர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்தது. தெலுங்கானாவை சேர்ந்த அனில் குமார் (வயது 29) என்பவருக்குத்தான் இந்திய மதிப்பில் ரூ.240 கோடி பரிசாக அடித்தது.
ஐதராபாத்தில் தனது கல்வியை முடித்த பிறகு, அனில் குமார் அபுதாபிக்குச் சென்றார். அங்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஐடி நிபுணராகப் பணியாற்றி வரும் இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன்படி, அண்மையில் லாட்டரி ஒன்றை வாங்கினார். தனது தாயார் பூலட்சுமியின் பிறந்தநாளைக் கொண்டிருந்த லாட்டரி எண்ணை தேர்வு செய்த அனில் குமாருக்கு கற்பனை செய்து கூட பார்க்காத பெரும் தொகை அடித்தது.
மகிழ்ச்சியில் திளைத்த அனில் குமார்
இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அனில் குமார், தனது பெற்றோருக்கு இந்த தகவலை தெரிவித்தார். மகனுக்கு ரூ.240 கோடி பரிசு விழுந்ததும் பெற்றோருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. கம்மம் பகுதியில் வெம்சூர் மண்டலத்தில் உள்ள பீமாவரம் கிராமத்தில் வசித்து வரும் மாதவ ராவ் மற்றும் பூலட்சுமி ஆகியோர் தங்கள் மகன் லாட்டரியில் பணம் வென்றதை அறிந்ததும் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.
ரூ.240 கோடி பரிசுத்தொகை கிடைத்ததையடுத்து கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை என சொல்வார்களே அதைபோல் கடந்த சில நாட்களாக மகிழ்ச்சியில் திளைத்து வந்த அனில் குமார் இந்த பணத்தை என்ன செய்ய போகிறேன்... அடுத்த கட்ட திட்டம் என்ன என்பது பற்றி பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து வேலை செய்ய போகிறேன்
இது குறித்து அனில் குமார் கூறியதாவது: லாட்டரியில் இவ்வளவு பெரிய பரிசுத் தொகை விழுந்தாலும் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கவே விரும்புகிறேன். யுஏஇ என்பது மிகவும் பாதுகாப்பான நாடு, இங்கே வாழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது பெற்றோரும் சகோதரரும் இங்கே வந்து நான் வாழும் வாழ்க்கையை போல அவர்களும் வாழ விரும்புகிறார்கள்.
சொந்தமாக ஒரு வீட்டை வாங்க முடிவு செய்துள்ளேன். கடந்த மாதம் 18 ஆம் தேதி, வீட்டில் இருந்த போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லாட்டரி குழுவிலிருந்து போன் கால் வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. ரூ.240 கோடி ஜாக்பாட் அடித்ததாக கூறினர். முதலில் சற்று அதிர்ச்சி அடைந்தேன். என்னால் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லை. பிறகு கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்க முயற்சித்தேன். பரிசுத்தொகை விழுந்ததை கொண்டாடினேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்," என்றார்.
பெற்றோர்கள் கருத்து
அனில் குமாரின் பெற்றோர் கூறும் போது, "எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை," என்றனர். 60 வயதான தந்தை மாதவா ராவ், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு சிறு விவசாயி. அவருக்கு மற்றொரு மகன் சுப்பிரமணியம் உள்ளார்.
இவர்கள் சொந்த ஊரில் விவசாயம் செய்து மகனை படிக்க வைத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது வெளிநாட்டில் பெரும் தொகை அதிர்ஷ்டமாக அடித்து இருப்பதை நினைத்து மொத்த கிராமத்தினரும் சந்தோஷம் அடைந்துள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications