“நான் பெண் அல்ல.. என்னை அவள் என குறிப்பிட வேண்டாம்” : பாலின அடையாளம் குறித்து பேசிய நேஹா போரா
டெல்லி: அனைத்திந்திய மாணவர் சங்கத் தலைவரான ஜேஎன்யு ஆராய்ச்சி மாணவர் நேஹா போரா, தான் ஒரு பெண் அல்ல என்றும், தான் ஒரு 'நான்-பைனரி' அடையாளத்தைக் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் தன்னை 'பெண்' என்றும், 'அவள்', 'She' என்ற பாலின வார்த்தைகளைக் கொண்டு குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நேஹா போரா கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாணவர் போராட்டங்கள் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜே.என்.யு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் நேஹா போரா. அனைத்திந்திய மாணவர் அமைப்பின் (AISA) தலைவர் நேஹா போரா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டத்தில் பங்கேற்று கைதானபோது பெரும் கவனம் பெற்றார்.
நேஹா போரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பாலின அடையாளம் குறித்து வெளிப்படுத்தினார். பல செய்தி நிறுவனங்களும் ஊடகங்களும் தன்னைத் தொடர்ந்து 'பெண்' என்ற பொருளில் 'She' போன்ற பாலினச் சொற்களைப் பயன்படுத்தி அழைப்பது குறித்து அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
'நான்-பைனரி' (Non binary) நபர்களுக்கு உரிய சரியான உச்சரிப்புகளை பயன்படுத்துவது அரசியல் ரீதியாக எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி நேஹா போரா பேசியுள்ளார்.
பொதுவாக சமூகம் மனிதர்களை ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பாலினக் கட்டமைப்புக்குள் மட்டுமே பார்த்துக் பழக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இருபிரிவுகளுக்குள்ளும் முழுமையாக அடங்காமல், தங்களை ஆண் என்றோ பெண் என்றோ பிரிக்க முடியாத தனித்துவமான பாலின அடையாளத்தைக் கொண்டவர்களை 'நான்-பைனரி' என்று அழைக்கின்றனர்.
இவர்கள் தங்களை ஒன்றுக்கு மேற்பட்ட பாலினத்தவராகவோ அல்லது குறிப்பிட்ட எந்தப் பாலின அடையாளமும் அற்றவர்களாகவோ உணர்வார்கள். இது ஒரு நபரின் உடல்ரீதியான அமைப்பைக் குறிப்பது அல்ல, மாறாக அவர்களின் உளவியல் சார்ந்த பாலின அடையாள வெளிப்பாடு.
பாலினச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்துவது, ஞானேஷ் குமாரின் ராஜினாமாவுக்கான தங்களின் அரசியல் கோரிக்கையைப் போன்ற அதே முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் கொண்டுள்ளது என்றும் நேஹா போரா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
