நீங்கள் விட்டு சென்றதை அரசு செய்து முடிக்கும் என நம்புகிறேன்; வெங்கையா நாயுடுவுக்கு கார்கே புகழாரம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 12ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மாநிலங்களவையில் பிரியாவிடை கொடுக்கப்பட்டது.
இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, "கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அழுத்தமான தருணங்களில் நீங்கள் சிறப்பாக பணியாற்றினீர்கள் அதற்காக நன்றி கூறுகிறேன்" என வெங்கையா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் விட்டுச்சென்ற பணியை அரசு முன்னெடுத்து சென்று முடிக்கும் என்றும் கார்கே நம்பிக்கை தெரிவித்து வெங்கையா நாயுடுவுக்கு விடையளித்துள்ளார்.
நாட்டின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக 73 வயதான வெங்கையா நாயுடு கடந்த 2017லிருந்து இந்த பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது. முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், சபாநாயகர் மற்றும் பிரதமர் அனைவரும் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் நாம் அனைவரும் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால், இந்த முறை அத்தகைய தனி சிறப்பு வாய்ந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் குடியரசுத் துணைத் தலைவருக்கு பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்தனர். அப்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, "நாடாளுமன்ற மாநிலங்களவையின் தேசியக் கொள்கைக்காக பல தருணங்களில் நீங்கள் வாதிட்டுள்ளீர்கள். அதேபோல, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மற்றும் பிற பிரச்சனைகளில் ஒருமித்த கருத்து குறித்தும் பேசினீர்கள். நீங்கள் விட்டு செல்லும் முழுமையடையாத பணிகளை அரசு நிறைவு செய்யும் என நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நாம் இரு வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருக்கலாம். உங்களிடம் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவற்றை பற்றி பேச இது நேரமில்லை. நீங்கள் கடினமான, அழுத்தமான சூழல்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்" என கார்கே தனது உரையில் கூறினார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் வரும் 11ம் தேதி பொறுப்பேற்றுக்கொள்கிறார். இதனையடுத்து மொஹரம் மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைகளையொட்டி நாடாளுமன்றத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே இன்று வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று மாலை ஜிஎம்சி பாலயோகி ஆடிட்டோரியத்தில் குடியரசுத் துணைத் தலைவருக்கான பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி வெங்கையா நாயுடுவுக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்குவார். மேலும், இவர் ராஜ்யசபா தலைவராக இருந்த காலத்தை விவரிக்கும் ஒரு பிரசுரமும் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து இரவு விருந்து நடைபெறும். முன்னதாக புதிய குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள தன்கர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் வரை கலந்துரையாடினார். பின்னர் வெங்கையா நாயுடு தன்கரை தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications