அரசு பங்களாவை காலி செய்யுங்க..மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்.. ராகுல் காந்தி கொடுத்த 'நறுக்' ரீப்ளே!
டெல்லி: எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்திக்கு மக்களவை உறுப்பினர் என்ற முறையில் டெல்லியில் ஒதுக்கப்பட்டு இருந்த அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நோட்டீஸிற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக சூரத் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்
இந்த வழக்கில் கடந்த 23 ஆம் தேதி தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நிக்கம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை லோக்சபா செயலகம் அறிவித்தது.

காலி செய்யக்கோரி நோட்டீஸ்
மக்களவை உறுப்பினர் என்ற முறையில், ராகுல் காந்திக்கு டெல்லி துக்ளக் லேன் சாலையில் 12-ஆம் எண் முகவரி கொண்ட அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. ராகுல் காந்தி வீட்டில்தான் வசித்து வந்தார். தற்போது தகுதி நீக்கத்தால் எம்.பி. பதவியை ராகுல் காந்தி இழந்து விட்டதால், அந்த வீட்டை அவர் காலி செய்ய வேண்டும் எனக்கோரி மக்களவையின் வீட்டு வசதிக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கால அவகாசம் தேவைப்பட்டால்..
வரும் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, மக்களவை உறுப்பினர் பதவியை ஒருவர் இழந்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை என்று சொல்லப்படுகிறது. ராகுல் காந்திக்கு ஒருவேளை கால அவகாசம் தேவைப்பட்டால், வீட்டு வசதிக்குழுவுக்கு கடிதம் எழுதலாம் என்றும், அதை அக்குழு பரிசீலிக்கும் என்றும் அதிகரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

நிச்சயமாக பின்பற்றுவேன்
இதனிடையே, ராகுல் காந்தி வீட்டைக் காலி செய்யுமாறு விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார். அதில், கடந்த 4 முறையாக மக்களவை உறுப்பினராக இருந்த எனக்கு அங்கு (வீட்டில்) கிடைத்த மகிழ்ச்சியான நினைவுகளுக்கு கடன்பட்டுள்ளேன். எனது உரிமைகள் குறித்து பழி எதுவும் கூறாமல் கடிதத்தில் உள்ள விவரங்களை பின்பற்றி நிச்சயமாக நடப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த நாளே ராகுல் காந்தி பதில்
ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யுமாறும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. நேற்று இந்த நோட்டீஸ் ராகுல் காந்திக்கு பாராளுமன்ற வீட்டு வசதிக் குழு அளித்த நிலையில், மறுநாளே ராகுல் காந்தி பதிலும் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications