வாரத்துக்கு 6 நாள் வேலை.. கல்லறை வரை இதுதான் என் கருத்து.. இன்போசிஸ் நாராயண மூர்த்தி பேச்சு
டெல்லி: இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறுகையில், 1986-ல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் தனக்கு ஏமாற்றம் தந்தது. வாரத்துக்கு 6 நாள் வேலை அவசியம் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன்.. அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன், ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை.. பிரதமர் மோடி வாரத்தில் 100 மணி நேரம் வேலை செய்யும் போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்துவதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்" என்றார்.
சிஎன்பிசி குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இன்போசிஸ் நாராயண மூர்த்தி, ஜியோ ஃபைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் இயக்குனர் கே.வி.காமத்தின் அறிக்கையை குறிப்பிட்டு விவாதத்தில் பேசுகையில், வேலை-வாழ்க்கை சமநிலை என்ற விஷயத்தில் எனக்கும் துளியும் நம்பிக்கை இல்லை.. கடின உழைப்புக்கு மாற்று.. வேறு எதுவும் கிடையாது. இந்தியா, பல சவால்களை எதிர்கொள்ளும் வளரும் நாடாக, அதன் முன்னேற்றத்திற்காக கடினமாக உழைக்க விரும்பும் தனிநபர்கள் தேவை. அந்த அயராத கடின உழைப்புக்கு முன்மாதிரியாக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் மோடி வாரத்தில் 100 மணி நேரம் உழைக்கும்போது, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு பாராட்டு தெரிவிப்பதற்கான ஒரே வழி நமது உழைப்புதான்.

நம்முடைய நாட்டில் வலுவான பணி சார்ந்த நெறிமுறைகளை உருவாக்காமல் நம்மால் உலக நாடுகளுடன் வளர்ச்சி சார்ந்து போட்டியிட இயலாது. நம்முடைய முயற்சியில் தான் நமது நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. என்னுடைய பணி அனுபவத்தில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தேன். காலை 6:30 மணிக்கு தொடங்கி இரவு 8:40 மணி வரை வேலை செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஆறரை நாட்கள் வேலை செய்தேன். அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு இது அவசியம் ஆகும்.
ஆனால் 1986-ல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் வந்ததை கண்டு நான் ஏமாற்றம் அடைந்தேன். வாரத்துக்கு 6 நாள் வேலை அவசியம் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன். அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.. எனது இந்த கருத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை.
நாம் இந்த நாட்டில் கடினமாக உழைக்க வேண்டும், கடின உழைப்புக்கு ஈடுசெய்ய முடியாது, நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், நாம் பணி சார்ந்த உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரையில், ஊழலைக் குறைக்காத வரையில், அதிகார வர்க்கத்தில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்காத வரையில் வளர்ந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட இயலாது. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இதை நான் சொல்ல காரணம் இந்தியா எனது நாடு.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இதுதான் நடந்து வந்தது. குறிப்பிட்ட ஆண்டு காலம் அனைத்து ஜெர்மனி மக்களும் கூடுதல் நேரம் வேலை செய்வதை உறுதி செய்திருந்தது. கடினமாக உழைத்தால் தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சி காண இயலும். அந்த செயல்திறன் தான் நமக்கு அங்கீகாரம் அளிக்கும்.. அது மரியாதையையும், அதிகாரத்தையும் நமக்கும் வழங்கும். இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் என அடுத்த 20 - 50 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும். அப்போது தான் ஜிடிபி-யில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இந்தியாவால் இருக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications