அணுகுண்டு மையத்தை தாக்கியதால் பாகிஸ்தானில் பூகம்பம்? தீயாக பரவும் தகவல்! ஏர் மார்ஷல் விளக்கம்
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நிலவிய மோதல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருக்கும் கிரானா ஹில்ஸ் பகுதியை இந்தியா தாக்கியதாகவும் இதனால் தான் அங்கு நிலநடுக்கம் கூட ஏற்பட்டதாகவும் இணையத்தில் சிலர் கூறி வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திட்டவட்டமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது முதலில் பாக். ட்ரோன்களை இந்தியா வீழ்த்த மட்டுமே செய்தது. பாக். தாக்குதல் தொடரவே அதன் பிறகு இந்தியா திரும்பித் தாக்கியது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இதில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைக்கு மிக மோசமான சேதம் ஏற்பட்டது. அதன் பிறகே அவர்கள் மோதலை நிறுத்த ஓடி வந்தார்கள்.

நிலநடுக்கம்
அதேநேரம் இந்தியாவின் தாக்குதல் தொடர்பாக இணையத்தில் பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகிறது. அதாவது பாகிஸ்தானில் கிரானா ஹில்ஸ் என்ற பகுதியை இந்தியா தாக்கியதாகச் சொல்லப்பட்டது. இந்த கிரானா ஹில்ஸ் பகுதியில் தான் பாக். ராணுவம் அணு ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அதைத் தாக்கியதாலேயே பயந்து போர் நிறுத்தத்திற்கு வந்ததாகவும் சிலர் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்புகிறார்கள்.
மேலும், பாகிஸ்தானில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதற்குக் கூட கிரானா ஹில்ஸில் இந்தியா நடத்திய தாக்குதலே காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்புகிறார்கள்
விமானப்படை விளக்கம்
இதற்கிடையே இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் முப்படைகளின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது கிரான ஹில்ஸ் தொடர்பான கேள்விக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கிரானா ஹில்ஸ்
அதாவது நாம் கிரானா ஹில்ஸ் என்ற பகுதி மீது தாக்குதல் நடத்தியதாகவும் அங்கு அணுசக்தி மையம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது என்று செய்தியாளர் குறிப்பிட்டார். மேலும் அவர், அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் அணு அயுத லீக் ஆனதாகவும் சிலர் சொல்கிறார்கள்.. நாம் அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தினோமா.. அல்லது அந்தப் பகுதியைத் தவிர்த்துவிட்டோமா என்பது குறித்து விளக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
தாக்கவில்லை
கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் குறிவைக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி உறுதிப்படுத்தினார். அதற்குப் பதிலளித்த ஏகே பாரதி, "கிரானா ஹில்ஸில் சில அணுசக்தி நிலையம் இருப்பதை எங்களுக்கு விரிவாகச் சொன்னதற்கு நன்றி.. அது பற்றி எங்களுக்குத் தெரியாது" என்று சற்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் அவர், "இல்லை.. நாங்கள் கிரானா ஹில்ஸைத் தாக்கவில்லை.. அங்கு என்ன இருந்தாலும் சரி அதை நாங்கள் தாக்கவில்லை" என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார்.
கிரானா ஹில்ஸ் என்றால் என்ன?
கிரானா ஹில்ஸ் என்பது சர்கோதா மாவட்டத்தில் உள்ள ஒரு நீண்ட பெரிய பாறைகள் நிரம்பிய மலைத்தொடராகும். இது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. இந்த மலைத்தொடர் பழுப்பு நிறத்தில் இருப்பதால் அதைக் கருப்பு மலைகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது ரப்வா நகரத்திற்கும் சர்கோதா நகரத்திற்கும் இடையில் நீண்டுள்ளது.
அந்த மலைகளைக் குகைகளை உருவாக்கி, பாகிஸ்தான் ராணுவம் அதில் அணு ஆயுதங்களின் ஒரு பகுதியைச் சேமித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா ராணுவம் அதைக் குறிவைத்துத் தாக்கியதாகச் சொல்லப்படும் நிலையில், அதை ஏர் மார்ஷல் ஏகே பாரதி மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications