EVM உதவியால் ஜெயிக்கிறோமா? அப்படின்னா தமிழ்நாட்டில் ஏன் தோற்றோம்? எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா கேள்வி
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(இவிஎம்) மத்தியில் ஆளும் பாஜகவுடன் தொடர்புபடுத்தி ஏராளமான விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நாங்கள் வெற்றி பெற்றோம் என்றால், தமிழ்நாட்டில் ஏன் தோற்றோம்?" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ளது. கடந்த 19ஆம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதேபோல ஏப்.26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இச்சூழலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி பாஜக வெற்றி பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்தியாவில் சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்கள் அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. ஆனால் இந்த இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது தேர்தலின் போது எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் ஒப்புகை சீட்டை வைத்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், இந்த சீட்டுக்கள் பதிவான வாக்குகளுடன் எண்ணப்படுவதில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அதாவது, "விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 5-6 மணி நேரத்தில் பணியை முடித்துவிடலாம். 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களை வாங்க அரசு ரூ.5000 கோடியை செலவழித்துள்ளது. ஆனால் தற்போது வரையில் வெறும் 20,000 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 5 சதவிகிதம்தான்" என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த அமித்ஷா, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். நியூஸ் 18 சார்பில் அமித்ஷாவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் கைது தேர்தல் நேரத்தில் ஏன்? என்கிற உச்சநீதிமன்றத்தின் கேள்வியை அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் முன்வைத்தனர்.
அதற்கு, "உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உரிய விளக்கம் அளிக்கும். ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதல் முறை அனுப்பப்பட்ட சம்மனுக்குப் பிறகு அவர்கள் ஆஜராகியிருந்தால், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருப்பார்கள். பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை" என்று பதிலளித்திருந்தார்.
அதேபோல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. EVM பற்றி எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாகவே பேசி வருகின்றன. எப்பொழுதும் EVM மூலம்தான் பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது நீங்கள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று பேசுகிறீர்கள். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர்.
இதற்கு, "நான் முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். ராகுல் காந்தி சொல்வதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்றால், தெலுங்கானா அல்லது தமிழ்நாட்டில் ஏன் தோற்றோம்? ஏன் பல ஆண்டுகளாக கேரளாவில் தோற்று வருகிறோம்? இமாச்சலத்திலும் வங்காளத்திலும் ஏன் தோற்றோம்? அப்படி என்றால் அப்போது ராகுல் காந்தி, இவிஎம்கள் மூலம் காங்கிரஸ் வென்றாலும், நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்ய மாட்டோம் என தெளிவாகச் சொல்ல வேண்டும்.
வெற்றி பெற்றால் புதிய ஆடை அணிந்து சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். தோற்கும் போது, EVMகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இது என்ன வகையான அரசியல்? நீங்கள் வெற்றி பெற்றால், EVM சரியாக வேலை செய்கிறது. அதுவே நீங்கள் தோற்றால், EVM பயனற்றது. இதையெல்லாம் நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் இவ்வளவு பெரிய கட்சி அதன் தலைவரின் ஆலோசகரை ஏன் மாற்றவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்கள் தேர்தல் அறிக்கையின் சாராம்சம், அதைச் செயல்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுப்போம்" என்று பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications