நான் மட்டும் ராஜினாமா செய்திருந்தால்.. மம்தா, ஸ்டாலினை பாஜக கைது செய்திருக்கும்.. கெஜ்ரிவால் பகீர்
டெல்லி: அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து நான் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தால் அடுத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை பாஜக கைது செய்து இருக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பாக கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 23ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தாலும் கூட அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
பாஜக உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை மூலம் தன்னை கைது செய்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. 50 நாட்களாக அவர் சிறையில் இருந்தார். அதன்பிறகு உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வசதியாக ஜுன் 1ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜுன் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் முடிவடைந்த பிறகு ஜுன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சரணடைந்து சிறை செல்ல வேண்டும். இதற்கிடையே தான் அவர் இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இடைக்கால ஜாமீன் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தான் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியின்போது அரவிந்த் கெஜ்ரிவாலிடம், ‛‛அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் இருந்தபோது எதற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை?’’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கெஜ்ரிவால், ‛‛முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். டெல்லியில் என்னை தோற்கடிக்க முடியாது என்று அவருக்கு தெரியும். அதனால் தான் இந்த முழு சதியும் நடந்துள்ளது.
இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்சநீதிமன்றம் மறுப்பு!
மேலும் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தால் அடுத்தடுத்த பிற மாநில முதல்வர்கள் குறிவைக்கப்பட்டு இருப்பார்கள். எனக்கு பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து ஆட்சியை கவிழ்க்க அவர்கள் (பாஜக) நினைத்தனர். இதனால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
நான் ஜெயிலில் இருந்தாலும் டெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெல்லும்: கெஜ்ரிவால்
அதோடு நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டு முதல்வர் நாற்காலியில் அமரவில்லை. மாறாக ஜனநாயகத்துக்கு கேடு விளைவிப்பதை தடுக்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தேன். எனக்கு எப்போதும் அதிகாரப்பசி என்பது இருந்தது இல்லை. இதனால் தான் வருமான வரித்துறை ஆணையர் பதவியை விட்டுவிட்டு குடிசைப்பகுதிகளில் பணிபுரிந்தேன்.
2013ல் 49 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால் இப்போது நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பது என்பது எங்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாறி உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications