இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: தமக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காகப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் மறுத்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்த உடன், ஜூன் 2-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்து மீண்டும் சிறைக்குப் போக வேண்டும் என்பது ஜாமீன் உத்தரவு. அதேநேரத்தில் தமக்கான இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே அவசரமாக விசாரிக்க மறுத்திருந்தனர்.
இந்த நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசர வழக்காகப் பட்டியலிட உச்சநீதிமன்றப் பதிவாளர் மறுத்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் இன்னும் 2 நாட்கள்தான். இதன் பின்னரும் ஜாமீன் நீட்டிப்பு கிடைக்காமல் போனால் சிறைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார். தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவும் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications