என்னை ஜெயிலில் அடைத்ததற்கு காரணமே வேற.. பிரசாரத்தில் பாஜகவை வெளுத்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: 20 நாட்களில் நான் மீண்டும் சிறைச்சாலைக்கு செல்ல இருக்கிறேன். நீங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட்டால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல மாட்டேன் என்று டெல்லியில் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாகக்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என்று கூறி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 1 ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று முன் தினம் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். நாடு முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக கெஜ்ரிவால் கூறினார். மேலும் சிறையில் இருந்து வெளிவந்ததும் முதலில் அனுமன் கோவிலுக்கு சென்று பிரசாரத்தை தொடங்கினார்.
நேற்று டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் சென்ற அவர், அங்கே கூடியிருந்த கட்சித்தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது பிரதமர் மோடியை கெஜ்ரிவால் கடுமையாக சாடினார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கடந்த 20 மணி நேரமாக நான் தேர்தல் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசி வந்தேன். அதன் மூலம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்தேன்.
டெல்லியில் அடுத்து அமையும் அரசில் ஆம் ஆத்மியும் அங்கம் வகிக்கும். அதன் மூலம் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து பெறப்படும். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், மு.க ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். மிகவும் ஆபத்தான ஒரு திட்டத்தை பிரதமர் தொடங்கி இருக்கிறார்.
ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதுதான் அந்த திட்டம். நாட்டின் அனைத்து தலைவர்களையும் ஒழித்து விட மோடி விரும்புகிறார்" என்று பேசினார். அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் உள்ள மோதி நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:- 20 நாட்களில் நான் மீண்டும் சிறைச்சாலைக்கு செல்ல இருக்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சி சின்னத்தை நீங்கள் தேர்வு செய்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல மாட்டேன். நான் செய்த ஒரே தவறு என்னவென்றால் டெல்லியில் பள்ளிகளை கட்டியதுதான். நான் உங்களுக்காக பணியாற்றியதால் என்னை சிறைக்கு அனுப்பினார்கள். டெல்லி மக்களுக்கு பணி நடைபெறுவதை பாஜக விரும்பவில்லை. நான் சிறைக்கு சென்றால் உங்களுக்கு செய்த பணிகளை பாஜக நிறுத்திவிடும். பள்ளிகளின் தரத்தை குறைத்து விடும். மருத்துவமனைகளை மூடி விடுவார்கள். மோஹல்லா கிளினிக்ஸ்களை பாஜக மூடிவிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications