கேரளாவில் “கை” ஓங்கும் காங்கிரஸ் .. பரிதாபகர நிலையில் ஆளும் மார்க்சிஸ்ட் -நியூஸ் 18 கருத்துக்கணிப்பு
டெல்லி: நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்டு உள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பல்வேறு வகைகளில் தயாராகி வரும் நிலையில், ஊடகங்கள், சர்வே நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நியூஸ் 18 - சி.என்.என். கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. மாநிலங்கள் வாரியாக எந்த கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது என்ற விபரங்களுடன் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் கோட்டை என கூறப்படும் கேரளாவில் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கை ஓங்கும் என நியூஸ் 18 வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 20 தொகுதிகளில் 14 இடங்களில் வெற்றி பெறும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 20 ல் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 20 ல் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலத்தில் மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆளும் கட்சியாக பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிர்கட்சியாக காங்கிரசும் உள்ளன. இவ்விரு கட்சிகளும் அம்மாநில சட்டமன்ற தேர்தலில் மாறி மாறி வெற்றி பெற்று வந்து இருக்கின்றன. ஆனால் கடந்த 2 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று பினராய் விஜயன் 2 வது முறையாக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்றவர்களை கொண்ட மாநிலமாக கருதப்படும் கேரளா கம்யூனிஸ்டுகளின் கோட்டை என வர்ணிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் புரட்சிகர சோசியலிச கட்சி ஒரு தொகுதியிலும், கே.சி.எம் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. மத்தியில் ஆளும் பாஜக ஒரு தொகுதியில் கூட 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்று கேரளாவில் தனது கணக்கை தொடங்கும் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
கேரளாவை பொருத்தவரை 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதன் மூலம் கேரள மக்கள் சட்டசபை தேர்தலையும் மக்களவைத் தேர்தலையும் தனித்து பிரித்து பார்க்கிறார்கள் என்பது தெளிவாகிறது. எனவே இந்த முடிவு என்பது கேரள ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவாக இருக்காது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications