Independence Day 2025: ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு வீர வணக்கம்.. செங்கோட்டையில் முழங்கிய மோடி
டெல்லி: நாடு முழுக்க இன்று உற்சாகத்தோடு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாகப் பிரதமர் மோடி பேசினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரமதர் மோடி பேச்சு
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "140 கோடி மக்களின் கொண்டாட்டம் தான் இந்தச் சுதந்திர தினம்.. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த விரும்புகிறேன். கோடிக் கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது.. கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டம் தான் நம்மை வழி நடத்துகிறது.. அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கிய சிற்பிகளை வணங்கிக் கொள்கிறேன்.
இன்று சிறப்பு வாய்ந்த நாள்; ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. ஆபரேஷன் சிந்தூரை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்.. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மக்கள் அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருந்தனர்.. 10 ஆண்டுகளில் நடக்காத ஒரு விஷயத்தை நமது ராணுவம் நடத்திக்காட்டியுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
பாகிஸ்தானில் 100 கிமீ உள்ளே சென்று தீவிரவாத முகாம்களை அழித்துள்ளோம். அணு ஆயுத மிரட்டலை இனியும் சகித்துக் கொள்ள மாட்டோம்.. நமது நாடு பல ஆண்டுகளாகத் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.. பயங்கரவாதமும் அதன் ஆதரவாளர்களும் இனி வேறு விதமாகக் கையாளப்படுவார்கள்.. எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி எப்படிக் கொடுக்கலாம் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும்.. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது.. தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது.. ஒருதலைப்பட்சமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் காரணமாக நமது விவசாயிகள் பல ஆண்டுகளாக இதனால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
செமி கண்டக்டர்கள்
இந்தியாவிலேயே விரைவில் செமி கண்டக்டர்கள் உற்பத்தி செய்யப்படும்.. பல ஆண்டுகளாக நாட்டில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க முடியாமல் இருந்தது.. நடப்பு ஆண்டுகள் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கப்படும்.. விரைவில் எரிசக்தித் துறையிலும் தற்சார்பு நிலையை அடைவோம்.. அணு சக்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிகப் பெரிய சீர்திருத்தங்களைச் செய்து வருகிறோம்.. 2025ம் ஆண்டுக்குள் 50% மாற்று எரிசக்தி என்ற இலக்கை எட்டிவிட்டோம்..
நாம் பெரிதாகக் கனவு காண வேண்டும்.. கனவு காணுங்கள் நான் துணை நிற்பேன், வரலாறு படைப்போம்.. இளைஞர்களே, புதிய யோசனைகளுடன் வாருங்கள்.. தற்சார்பு இந்தியாவே நாட்டின் முழக்கமாக இருக்கும்.. டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு இல்லை.. வருமான வரி சீர்திருத்தம் மூலம் மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ளது.
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை
உலகளவில் உற்பத்தியில் இந்திய விவசாயிகள் சாதனை படைத்து வருகிறார்கள்.. பருப்பு உற்பத்தியில் முதலிடம், அரிசி கோதுமை உற்பத்தியில் இந்திய விவசாயிகள் சாதனை படைத்து வருகிறார்கள்.. நமது விவசாயிகள், மீனவர்கள், கால்நடை விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தவொரு கொள்கைகளையும் ஏற்க முடியாது. விவசாயிகள் மற்றும் மீனவர் நலனில் சமரம் செய்து கொள்ள முடியாது.
மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி என்பதை நாம் மறக்கக்கூடாது.. அனைத்து மொழிகள் குறித்தும் பெருமைகொள்ள வேண்டும்.. இந்தியா என்ற தோட்டம் பல மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே நமக்கு பெருமை.. மராத்தி, அசாமி உள்ளிட்ட மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.. இந்த நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.. நாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆற்றிய 100 ஆண்டுக்காலச் சேவைக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்"












Click it and Unblock the Notifications