Independence Day 2025: செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி! நாடு முழுக்க சுதந்திர தின விழா கொண்டாட்டம்
டெல்லி: இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நாடு முழுக்க உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். இதற்காக டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம். இந்தச் சுதந்திர காற்றை சுவாசிக்கப் பல சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகமே நாம் இன்று சுதந்திரமாக இருக்கக் காரணமாக இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் கொண்டாடி வருகிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், முக்கிய கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மேலும், நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.
குறிப்பாக டெல்லியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கோட்டையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் என பலரும் பங்கேற்பதால் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், செங்கோட்டையை அருகே உள்ள அனைத்து சாலைகள் பாதுகாப்பு படை கட்டுப்பாடிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் வகையில் அமைகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை கொண்டாடும் வகையில் இன்றைய நாள் கொண்டாட்டங்கள் அமைகிறது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். 2014-ல் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, மோடி தொடர்ந்து 12-வது முறையாகச் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றியை ஏற்றினார். காலை 7:30 மணிக்கு செங்கோட்டையில் நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில், பிரதமர் தேசிய கொடியை ஏற்றினார்.
பிரதமர் மோடி முதலில் தேசியக் கொடியை ஏற்றிய நிலையில், தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த தகவல்கள் இருந்தன.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் 1947 ஆகஸ்ட் 15. அன்றைய தினம் இந்தியா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடாக உருவெடுத்தது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அன்றைய தினம் செங்கோட்டையில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, புதிதாகச் சுதந்திரம் பெற்ற தேசத்திற்கு உரையாற்றினார். அன்று தொடங்கிய வைத்த இந்த மரபு, இன்று வரையிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications