4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் நடந்த மேஜர் மாற்றம்! லடாக்கில் இந்தியா - சீனா படைகள் விலக்கம் நிறைவு!
டெல்லி: லடாக் எல்லையில் இந்தியா - சீனா படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. லடாக்கில் சர்ச்சைக்குரிய எல்லையில் இருந்து இருநாட்டு படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன. படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் எல்லையில் ஒருங்கிணைந்த ரோந்துப் பணி தொடங்கும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்களும் சீன வீரர்கள் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாடுகளும் தங்கள் படைகளைக் குவித்தன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே மோதல் நீடித்து வந்தது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா - சீனா இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த 21 ஆம் தேதி அறிவித்தது.
கடந்த புதன்கிழமை ரஷ்யாவில் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெரும் நடவடிக்கையை இரு நாடுகளும் தொடங்கின. லடாக்கின் டெம்சோக், டெப்சாங் ஆகிய 2 பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை தொடங்கியது இந்திய ராணுவம்.
கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை இன்று முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுளது. எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் அகற்றப்பட்ட போது, இரு நாட்டு ராணுவமும் ஆய்வு செய்ததாகவும் ராணுவ வட்டார தகவல் வெளியாகியுள்ளது.
படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் இரு தரப்பும் ஒருங்கிணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். தீபாவளியை முன்னிட்டு இனிப்பு பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications