உள்நாட்டு பிரச்சனை.. தலையிடாதீங்க! பத்திரிகையாளர் ஜுபைர் கைதை கண்டித்த ஜெர்மனிக்கு இந்தியா பதில்
டெல்லி: பத்திரிகையாளர் ஜுபைர் கைதை கண்டித்து ஜெர்மனி கருத்து தெரிவித்த நிலையில், உள்நாட்டு பிரச்சனைகளை தலையிட வேண்டாம் என்று இந்தியா பதிலளித்து இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

பத்திரிகையாளர் ஜுபைர்
நுபுர் ஷர்மாவின் இந்த சர்ச்சை கருத்தை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் என்று கூறப்படுகிறது. நுபுர் ஷர்மாவின் பேச்சு தொடர்பாக தனது ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் முதன்முதலில் செய்தி வெளியிட்ட அவர், தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்தன.

வழக்குப்பதிவு
தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதத்தில் பகிரப்படும் பொய்யான செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளியிட்டு வந்த ஜுபைர் ட்விட்டரில் தனது கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். சாமியார்கள் மாநாட்டில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதற்காக கடும் விமர்சனங்களை முன்வைத்த ஜுபைர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிவிட்டதாக கூறி பதிவான வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜுபைர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு
ஜுபைரின் கைதை கண்டித்து இந்திய பத்திரிகை அமைப்புகள் மட்டுமின்றி, பன்னாட்டு பத்திரிகையாளர் அமைப்பான CPI (Committee to Protect Journalists), அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் ஊடக பாதுகாப்புக்குழு உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பு, ஜுபைரின் கைதை சுட்டிக்காட்டி, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று தெரிவித்தது.

ஜெர்மனி கண்டனம்
இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பத்திரிகை சுதந்திரம் என்பது சமூகத்திற்கு நன்மையானது. அவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது கவலைக்குரியதாகும். பத்திரிகையாளர்களை விசாரணைக்கு உட்படுத்துவதும் கைது செய்வதும் சரியல்ல. ஜுபைர் விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது." என்று கூறியது.
Recommended Video

இந்திய வெளியுறவுத்துறை
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், "இது எங்கள் உள்நாட்டு விவகாரம். ஜுபைர் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எங்கள் சட்டத்துறை சுதந்திரமாக செயல்படக்கூடியது. இது தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பயனற்றவை. இது சரியல்ல." என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications