Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியன்டா.." நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்க.. இதுதான் விஸ்வரூப வளர்ச்சி.. ஒரு ரீவைண்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆங்கிலேயேர்களின் அடிமைத்தளத்தில் இருந்து விடுபட்ட 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் அடியெடுத்து வைக்கிறோம். எனவேதான், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை இந்தியா ஒரு பண்டிகையை போன்ற மனநிலையில் எதிர்கொண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்த தருணத்தில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியை அளவிட்டு பார்த்தால், உண்மையில் பிரமிப்பாகதான் இருக்கிறது.

சுதந்திரம் பெற்ற போது ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்ட இந்தியா, இன்று மேற்கத்திய நாடுகளுடன் போட்டிப் போடும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை, 1990-க்கு முன் 1990-க்கு பின் என இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். இந்தக் காலக்கட்டத்துக்கு முன்பு இந்தியாவில் அறிவியல் சாதனங்களே வரவில்லையா எனக் கேட்டால் அது சரியாக இருக்காது. அறிவியல் வளர்ச்சி என்பது தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்துதில் இல்லை. பெரும்பாலான மக்கள் மத்தியில் அந்த சாதனங்கள் என்றைக்கு புழக்கத்துக்கு வருகிறதோ அதுவே உண்மையான அறிவியல் வளர்ச்சி ஆகும். அந்த வகையில் பார்த்தால் 1990-களே அறிவியல் உலகில் இந்தியா முழுமையாக பிரவேசித்த காலக்கட்டம் என்று தைரியமாக சொல்லலாம்.

இன்றைக்கு அதிநவீன அறிவியல் தொழல்நுட்ப சாதனங்களுடன் பின்னி பிணைந்து வளர்ந்த 2k கிட்ஸுகளுக்கு அன்றைய காலக்கட்டம் எப்படி இருந்தது என்பது நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய 2k கிட்ஸுகளுக்கு இதனை உணர வைப்பதும், அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களை சற்று பின்னோக்கி பயணப்பட வைத்து, இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள 100 சதவீதம் நமக்கு தகுதி உள்ளது என்பதை புரிய வைக்க மேற்கொண்டு நீங்கள் படித்தாலே புரிந்து விடும்.

1982 முதல் 1991ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் 90ஸ் கிட்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது 90ஸ்களில் இவர்கள் கிட்ஸ்களாக இருந்திருப்பார்கள். இப்படிப்பட்ட 90ஸ் கிட்ஸ்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி தாங்கள் வளர்ந்த காலக்கட்டத்தை பற்றி பேசி பீற்றிக் கொள்வதை பார்க்க முடியும். அப்படியென்ன அன்றைக்கு எல்லாம் அவர்களுக்கு கிடைத்து விட்டதா என்று கேட்டால்.. கிடையாது. மாறாக, அனைத்தும் இருக்கும் ஆனால் அவை எளிதில் அவர்களுக்கு கிடைத்துவிடாது. சட்டென ஒரு விஷயம் கையில் கிடைப்பதை காட்டிலும் அவை முயற்சி செய்து கிடைக்கும் சுகமே அலாதியானதுதான். அதனை அனுபவித்தவர்கள் தான் 90ஸ் கிட்ஸ். அப்படி என்னென்ன அனுபவம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இப்போது அதெல்லாம் எப்படி எளிமையாக கிடைக்கும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம், என்பதை சில உதாரணங்களுடன் இங்கு பார்க்கலாம்.

 ஒனிடா கலர் டிவி

ஒனிடா கலர் டிவி

1980-களில் இந்திய வீடுகளில் வானொலிக்கு மாற்றாக Black and white தொலைக்காட்சிகள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தன. அந்த சமயத்தில் ஒரு ஊருக்கு 3 வீடுகளில்தான் டிவிக்கள் இருக்கும். அவர்களும் மிகுந்த செல்வந்தர்களாக இருப்பர். அந்த வீடுகளில் இருக்கும் பிள்ளைகள் தாங்கள் டிவியில் படம் பார்த்த அனுபவத்தை சொல்ல, அதை கேட்பதற்கே சிறுவர்கள் பட்டாளம் முண்டியடிக்கும். பின்னர் இந்த நிலைமை கொஞ்சம் மாறி, 80-களில் இறுதிக்கட்டத்தில் Black and white டிவிக்கள் ஓரளவுக்கு நடுத்தர வீடுகளுக்கும் வரத் தொடங்கியது. அப்போது பெட்டி போன்று திறந்து மூடும் மரப்பெட்டிக்குள் பொக்கிஷம் போல டிவிக்கள் வைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் மேலே சொன்னது போல 1990-களின் தொடக்கத்தில் உலகமயமாக்கலால் வேலைவாய்ப்பு சற்று பெருகி மக்களிடம் பணம் சிறிது புழங்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் வராது வந்த அதிசயமாக கலர் டிவிக்களின் வரவு களைக்கட்டியது. பிபிஎல், வீடியோகான், சாலிடேர் என பல கலர் டிவிக்கள் மக்கள் வீடுகளை ஆக்கிரமிக்க தொடங்கின. அதுவரை வெறும் கறுப்பு வெள்ளையாக திரைப்படங்களை பார்த்த மக்களுக்கு கலர் டிவிக்கள் பேரதிசயமாகவே இருந்தது. எப்படி டிவியில் பல்வேறு நிறங்கள் தெரிகிறது என்பது அப்போதைய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் பேசுபொருளாக இருந்தது. பிபிஎல், வீடியோகான் என பல கலர் டிவிக்கள் வந்தாலும் ஒனிடா டிவிக்களின் வருகை இந்தியாவை ஒரு புரட்டு புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். மற்ற டிவிக்களை விட சற்று பெரிதாகவும், தெளிவான விஷுவல்களுடனும் இருந்ததால் ஒனிடா டிவிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஏழைகளின் சோனி டிவி என்று அப்போது ஒரு அடைமொழி ஒனிடாவிற்கு இருந்தது. ஆனாலும் அதன் விலை அப்போதைய மதிப்பில் சோனியை தவிர்த்த பிற டிவிக்களை ஒப்பிட்டால் அதிகம்தான்.

இருப்பினும் ஒனிடா டிவி இத்தனை பிரபலமடைய அதன் விளம்பரத்துக்கு முக்கிய பங்கு உண்டு. மொட்டை தலையில் கொம்புகளை வைத்த மனிதன் அறிமுகப்படுத்துவதாக மிக வித்தியாசமாக அந்த விளம்பரம் இருக்கும். அந்த விளம்பரம் எவ்வளவு ஈர்ப்பாக இருந்ததோ, அதே அளவுக்கு 90ஸ் கிட்ஸ்களை பயமுறுத்தியது. அதுவரை அவர்கள் செவிவழியாக கேட்டு வளர்ந்த பூச்சாண்டி மனிதனுக்கு முழு உருவம் கொடுத்தது ஒனிடா டிவி விளம்பரம். பூச்சாண்டியை பாசிட்டிவாக காட்ட முடியும் என்பதை நிரூபித்தது ஒனிடா நிறுவனம். 1995ம் ஆண்டில் ஒனிடாவின் சந்தை பங்களிப்பு 20 சதவீதம் அளவுக்கு வளர்ந்தது. அதாவது 100 பேரில் 20 பேர் ஒனிடாவை கேட்டு வாங்கினர். சுமார் 20 வருடங்களாக ஒனிடா லாபம் ஈட்டியது. ஆனால் சோனி, சாம்சங் போன்ற சர்வதேச நிறுவன டிவிகள் செய்த ஸ்மார்ட் அப்டேட்களால் ஒனிடாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அம்பாசிடர் கார்

அம்பாசிடர் கார்

டிவிக்களை போலவே 90ஸ் கிட்ஸ்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டிய சாதனம் கார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. 1950-களிலேயே கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் சற்று புழக்கம் அதிகரித்தது 90-களில்தான். அவற்றில் குறிப்பாக அம்பாசிடர் கார் தனி இடத்தை பிடித்திருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஃபியட் பத்மினி போன்ற கார்கள் இருந்தாலும் அம்பாசிடர் காருக்கு இருந்த மதிப்பே தனி. பார்க்க நீளமாகவும், பெரிதாகவும், பால் வெள்ளை நிறத்துடன் சுற்றி வந்த அம்பாசிடர் கார்களை 90ஸ் கிட்ஸ்கள் என்றும் மறக்க மாட்டார்கள். அப்பொழுது இந்தியா முழுவதும் அரசியல்வாதிகளின் காராக இருந்தது அம்பாசிடர்தான். ஒருவர் அம்பாசிடர் கார் வைத்திருக்கிறார் என்றால் அவர் அரசியல்வாதியாக இருப்பார் அல்லது ஊரில் பெரும்புள்ளியாக இருப்பார். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் டாடா சுமோவுக்கு இருந்த கெத்தை விட அதிக கெத்தாக வலம் வந்தன அம்பாசிடர் கார்கள். காலம் செல்ல செல்ல வெளிநாட்டு கார்களின் வருகை அதிகரித்ததால் அம்பாசிடர் கார்களின் மவுசு குறைந்தது. பின்னர் லாபம் ஈட்ட முடியாமல் அம்பாசிடர் காரின் உற்பத்தியை இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் 2014-இல் நிறுத்திவிட்டது. இன்று வரை 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத கார் அம்பாசிடர். எவ்வளவோ சொகுசு கார்களை இப்போது இந்திய சந்தை பார்க்கத் தொடங்கியுள்ளது.

 மாருதி 800 கார்

மாருதி 800 கார்

90-களில் வலம் வந்த கார்களை பற்றி பேசும் போது மாருதி 800-ஐ பற்றி பேசாமல் இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், மக்களை வெகு சீக்கிரமாக ரீச் ஆன கார்களில் மாருதி 800-க்கு முதலிடம் உண்டு. அந்த சமயங்களில் இருந்த அம்பாசிடர், ஃபியட் பத்மினி போன்ற கார்கள் எல்லாம் டிக்கியுடன் இருக்கும். ஆனால் முதன்முதலாக டிக்கி இல்லாமல் சிறியதாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டு வந்திறங்கியவை மாருதி 800 கார்கள். அதுவரை படங்களில் பார்த்த வெளிநாட்டு கார்களை ஒத்த உருவத்துடன் மாருதி 800 கார்கள் இருந்ததே அதன் முக்கிய சிறப்பம்சம் ஆகும். மேலும், ஜப்பான் நிறுவனத்தின் பங்களிப்புடன் உருவான கார் என்ற பெயரும் மாருதி 800-ஐ நோக்கி மக்களின் கவனத்தை திருப்பியது. 1983-இல் அறிமுகப்படுத்தப்படாலும் 90-க்கு பிறகுதான் மாருதி 800 கார்களுக்கு மவுசு அதிகரிக்க தொடங்கியது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு காராகவும் அது மாறியது. அம்பாசிடர் கார் பெரிய மனிதர்களின் கார் என கருதப்பட்ட அதே வேளையில் மாருதி 800 கார்கள் வசதி படைத்த செல்வந்தர்கள் வைத்திருக்கும் கார்களாக பார்க்கப்பட்டன. மேலும், உயர் சமூகத்தினரின் (ஹை சொஸைட்டி) கார்கள் என்ற பிம்பமும் மாருதி 800 மீது இருந்தது. அதன் வேகமான பிக் அப்பும் இதற்கு ஒரு காரணம். ஒரு சோப்பு டப்பாவை போல பல வண்ணங்களில் அழகாக உலா வந்த மாருதி 800 கார்கள் 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இன்றும் தனி இடத்தை பிடித்திருக்கின்றன. ரோஜா அரவிந்த் சாமி கேரக்டர் மாருதி 800 காரில் வந்து இறங்கியது அப்போதைய மக்களின் மன பிரதிபலிப்புதான். ஆனால் இப்போது டச் ஸ்க்ரீன் வசதியுடன், 360 டிகிரி கேமரா, பானராமிக் சன்ரூப்களுடன் நாம் கார்களை பார்த்து வருகிறோம்.

 பஜாஜ் சேட்டக்

பஜாஜ் சேட்டக்

90ஸ் கிட்ஸ்களின் மனதில் அம்பாசிடர், மாருதி 800, ஒனிடா டிவி ஆகியவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தாக்கத்தை ஏற்படுத்தியது பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்கள். மேல்தட்டு மக்களுக்கு கார்கள் என்பதை போல ஹையர் மிடில் கிளாஸ் மக்களின் அடையாளமாக மாறியது பஜாஜ் சேட்டக். இதற்கு முன்பு இருந்த ஸ்கூட்டர்களின் உடல்வாகு சற்று ஒடுங்கிய நிலையில் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால் பஜாஜ் சேட்டக்கின் உடலமைப்பு விரிவாகவும், உயரமாகவும் பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கும். அதுமட்டுமல்லாமல் 90-களில் பிறந்தவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலோர் இந்த ஸ்கூட்டர்களையே வைத்திருந்தனர். அப்பா, அம்மா, இரு பிள்ளைகள் இருக்கும் சிறிய குடும்பத்தை பஜாஜ் சேட்டக் டக்கராக அழைத்துச் செல்லும். அப்பா வண்டி ஓட்ட; அம்மா பின்னால் அமர; தம்பி அல்லது தங்கை முன்னால் இருக்கும் இடைவெளியில் நின்றுக் கொண்டிருக்க; அண்ணன் அல்லது அக்காள் அப்பா - அம்மாவுக்கு இடையே சற்று நசுங்கிய நிலையில் உட்காந்திருக்க அனைவரையும் பேலஸ்ன்ஸ் செய்து அழைத்து செல்லும் பஜாஜ் சேட்டக். 90ஸ் கிட்ஸ்களுக்கு பஜாஜ் சேட்டக்கை ஒரு முறையாவது ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் பைக்கை போல இதை ஓட்டுவது எளிது கிடையாது. இடது கையில் கியர் போட வேண்டும் என்பதால் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் ஓட்டுவது சற்று கடினம். இதனால் அப்பாக்கள் நிச்சயம் மகன்களுக்கு ஸ்கூட்டரை ஓட்ட கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு வண்டி ஓட்டாமல் வீட்டுக்கு 2 பைக் அல்லது சிறு கார்களாவது வாங்கும் அளவுக்கான வசதியை கொடுத்துள்ளது நவீன இந்தியா.

ஹார்லிக்ஸ்

ஹார்லிக்ஸ்

இன்று எத்தனை எத்தனையோ ஹெல்த் டிரிங்குகள் வந்துவிட்டன என்றாலும் ஹார்லிக்ஸ் பிடித்திருக்கும் இடத்தை இன்றளவும் அவற்றால் பிடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். பிரிட்டிஷ் நிறுவனமான ஜிஎஸ்கே 1950ல் ஹார்லிக்சை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால் உலகமயமாக்கல் சந்தை திறந்துவிடப்பட்ட 90ஸ்களில்தான் இந்தியாவில் இதன் விற்பனை 4 கால் பாய்ச்சலை எட்டியது. 90-களில் வீடுகளில் கூழ் மாவு, ராகி மாவு பெற்றிருந்த இடங்களை முதலில் நிரப்ப தொடங்கியது ஹார்லிக்ஸ் பாட்டில்கள் தான். ஹார்லிக்ஸ் குடித்ததால் பிள்ளைகள் வலிமையாக வளர்வார்கள் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. இப்போது போல நவீன பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லாமல் பெரிய சீனக் கண்ணாடி பாட்டிலில் தான் ஹார்லிக்ஸ் இருக்கும். கருப்பட்டி காபியை சுவைத்த 90ஸ் கிட்ஸ்களின் நாவில் ஹார்லிக்ஸின் சுவை ஆனந்த தாண்டவமாடியது. இப்போது வரை ஏதேனும் டீக்கடையில் ஹார்லிக்ஸ் கேட்டு சுவைக்கும் நபர்களை விசாரித்து பாருங்கள். நிச்சயம் அவர்கள் 90ஸ் கிட்ஸ்களாகவே இருப்பார்கள். அறிமுகமான கால கட்டம் முதல் இப்போதுவரை ஹெல்த் ட்ர்ரிங்ஸ் மார்கெட் ஷேரில் ஹார்லிக்ஸ்தான் முன்னிலையில் உள்ளது. 2 வருடங்கள் முன்பு ஹெச்யூஎல் நிறுவனம் ஹார்லிக்சை வாங்கியது. வெளிநாட்டவரை போல ஹெல்த் ட்ரிங்ஸ் குடிக்கும் பழக்கத்தை பணப் புழக்கம் ஏற்படுத்த அதை ஹார்லிக்ஸ் சுவை சரியாக பயன்படுத்திக் கொண்டது.

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாம் அடைந்த முன்னேற்றங்களை திரும்பி பார்க்க இந்த நிறுவனங்கள் நமது உணர்வோடு கலந்து பயணித்து கண்ணாடி போல பிரதிபலிக்கின்றன என்றால் அவை மிகையில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+