சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?
டெல்லி: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்த நிலையில், அதில் சுமார் 25 கட்சிகள் பங்கேற்றன. இருப்பினும், இதில் பெரும்பாலான பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை நோக்கி சரமாரியாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் செயல்பாடுகளைப் பிராந்தியக் கட்சிகள் விமர்சித்த சூழலில், இது தொடர்பாக ராகுல் காந்தி கூட்டத்திலேயே முக்கிய விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில், டெல்லியில் இன்று திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 25 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டணிக்குள் இருக்கும் மோதல்களும், அதிருப்திகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அதிருப்தி
கூட்டத்தின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது பல மாநிலக் கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. குறிப்பாக, தேர்தல் பிரச்சாரங்களின் போது காங்கிரஸ் தலைவர்கள் மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதாகவும், முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த விமர்சனத்தை முதலில் முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸைக் கண்டித்தன.
விளக்கம்
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "தேசிய அளவில் நாம் ஒற்றுமையாக இருந்தாலும், மாநில அளவில் உள்ள அரசியல் சூழல் மற்றும் உள்ளூர் தலைவர்களின் கருத்துக்களையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது" என்று விளக்கமளித்தார்.
புறக்கணிப்பு
இந்தக் கூட்டத்தை திமுக புறக்கணித்து இருந்தது. தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த கூட்டணிக்குக் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காகத் துரோகம் செய்துவிட்டதாக திமுக தலைவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல், பஞ்சாப் தேர்தல் விவகாரத்தால் காங்கிரஸுடன் மோதலில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கரப்பான் பூச்சி கட்சி
இந்தக் கூட்டத்தில் அபிஜித் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கரப்பான் பூச்சி கட்சி மக்களின் உண்மையான பிரச்சனைகளை எழுப்புவதாகச் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே பாராட்டினார். எதிர்க்கட்சிகள் விட்டுச் சென்ற இடத்தைப் புதிய கட்சிகள் நிரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். நீட் தேர்வு முறைகேடு மற்றும் சிபிஎஸ்இ குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி விடுத்த கோரிக்கைக்கு இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசியபோது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதாவது இனி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பார்கள் என்றும் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்தியா கூட்டணி
கடந்த 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்தாண்டு ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகள் எந்தவொரு கூட்டம் நடக்காத சூழலில், இப்போது முதல்முறையாக 'இந்தியா' கூட்டணி கூட்டம் நடந்துள்ளது. 2029 தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இருந்தாலும், இப்போதே வியூகங்களை வகுக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இருப்பினும், திமுக மற்றும் ஆம் ஆத்மி போன்ற முக்கிய கட்சிகளின் விலகல் கூட்டணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications