எம்பிக்கள் பேச்சு..இந்தி திணிப்பு ‘சேட்டை’யில் சான்சட் டிவி.. சுப்ரியா சுலே, சு.வெங்கடேசன் எதிர்ப்பு
டெல்லி: லோக்சபாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் ஆங்கிலம் அல்லது தாய்மொழியில் பேசுவது வழக்கமானது. ஆனால் நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கூடிய சான்சட் டிவியானது ஆங்கிலம் அல்லது தாய் மொழியில் எம்பிக்கள் பேசுவதை ஒளிபரப்பு செய்வதை நிறுத்திவிட்டது; அதற்கு பதிலால எம்பிக்கள் ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் பேசும் போது இந்தி வாய்ஸ் ஓவர் செய்து இந்தி மொழிமாற்றத்தை மட்டுமே ஒளிபரப்புவதுதான் சர்ச்சையாகி உள்ளது.
18-வது லோக்சபாவின் 2-வது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நடப்பு மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டை நாளை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னதால லோக்சபாவில் இன்று நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுகவின் கலாநிதி வீராசாமி எம்பி உள்ளிட்டோர் எழுப்பினர். தமிழ்நாட்டின் சென்னையின் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததற்கு திமுக லோக்சபா குழுத் தலைவர் டிஆர் பாலு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்பக் கூடிய சான்சட் டிவி, இந்தி திணிப்பு நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சிபிஎம் கட்சியின் சு.வெங்கடேசன் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில், இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது. இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி எம்பி சுப்ரியா சுலேவும் இந்தி பேசாத மாநில மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சான்சட் டிவியின் இந்தி திணிப்பு ஒளிபரப்பை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications