தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்! எதிர்க்கட்சிகள் போடும் திட்டம்
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு திருட்டு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரியளவில் எழுப்பி வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி ஆலோசித்து வருகிறது.
ராகுல் காந்தி கடந்த வாரம் வாக்கு திருட்டு தொடர்பாகப் பல புகார்களை முன்வைத்திருந்தார். அதாவது நாட்டின் பல இடங்களில் ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்று இருப்பதாகவும், ஒருவரே பல தேர்தல்களிலும் வாக்களிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக பெங்களூர் மத்தியத் தொகுதியில் ஒரே வீட்டில் சுமார் 50 வாக்காளர்கள் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

தேர்தல் ஆணையம்
இதற்கு ஆதாரம் எனச் சொல்லி ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலின் போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை விமர்சித்தனர். இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கமளித்தனர். குறிப்பாக இந்த விவகாரத்தில் 7 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
பதவி நீக்கத் தீர்மானம்
இது இப்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் காங்கிரஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியினர் இது தொடர்பாகத் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
என்ன நடக்கும்
நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023இன் படி, உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் அதே வழிமுறைகள் மற்றும் காரணங்களின் அடிப்படையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையரையும் நீக்க முடியும். அதாவது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க முடியும். இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவே குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
எதிர்க்கட்சிகளிடம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்தத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பல முக்கிய தகவல்கள்
முன்னதாக நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருந்தார். வாக்கு திருட்டு போன்ற வார்த்தைகள் அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையத்திற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை என்றும் அனைத்துக் கட்சிகளையும் ஒரே மாதிரி தான் நடத்துவோம் எனக் குறிப்பிட்டார். மேலும், ராகுல் காந்தி பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்த ஞானேஷ் குமார், தலைவர்கள் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி, வாக்காளர்களைத் தவறாக வழிநடத்த முயல்வதாகவும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications