‘இந்தியா’ கூட்டணி சொல்வது பொய்.. இரவில் முக்கிய விளக்கம் தந்த தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சியினர் ராகுல் காந்தி தலைமையில் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தங்களை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் சொல்வது பொய். மாலை 4 மணி வரை எந்த கட்சியினரும் சந்திக்க அனுமதி கோரவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
'SIR' விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் இன்று 'இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் இன்று 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி புறப்பட்டனர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி செல்ல முயன்றும் முடியாத நிலையில் அவர்கள் ஆகாஷ்வாணி பவன் வளாகத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். இரவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பிற எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தான் 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் இந்திய தேர்தல் ஆணையர்களை சந்திக்க நேரம் கேட்டும் அவர்கள் ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''இன்று சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி ஊர்வலம் புறப்பட்டனர். அப்போது சில எம்பிக்கள் தங்களின் குழுவினருடன் தேர்தல் ஆணையத்தை சந்திக்க விரும்புவதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது. இன்றைய நிகழ்வுகள் தொடர்பாகத் தெளிவுபடுத்த வேண்டியது என்னவென்றால் இன்று மாலை 4 மணி வரை எந்தவொரு அரசியல் கட்சியும் தங்கள் பிரதிநிதிகள் வாயிலாக தேர்தல் ஆணையத்தை சந்திக்க நேரம் (அப்பாயிண்ட்மெண்ட்) கேட்கவில்லை.
அதன்பிறகு மாலை 4.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமயைிலான எம்பிக்கள் குழு ஒன்று தேர்தல் ஆணையத்தை சந்தித்து மனு அளிக்க விரும்புவதாக டெல்லி காவல்துறையிடமிருந்து இருந்து தகவல் ஒன்று வந்தது. அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நடைமுறை ஒன்றை ஏற்கனவே வகுத்துள்ளது. இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.
அதன்படி ஒரு அரசியல் கட்சியின் குழுவோ அல்லது பல கட்சிகளின் கூட்டுக்குழுவோ தேர்தல் ஆணையத்தை சந்திக்க விரும்பும்போது, முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலம் அதற்கான நேரத்தை கோர வேண்டும்.பின்னர், இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நேரத்தில் அந்தச் சந்திப்பு நடைபெறும்.
இன்று மாலை 4.00 மணிக்கு மேல் எம்பிக்களுடனா சந்திப்பு பற்றிய கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து கொண்டிருந்தபோது 240 எம்பிக்கள் குழுவுடன் அந்த சந்திப்பை நாடாளுமன்ற வளாகத்தில் தான் நடதப்பட வேண்டும் என்று அவர்கள் கோருவதாக டெல்லி காவல் துறையின் துணை ஆணையர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் இயல்புக்கு மாறானதாக கருதியது.
ஏனென்றால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி இத்தகைய சந்திப்புகள் இந்திய தேர்தல் ஆணைய வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதால் இந்த கோரிக்கையை ஏற்க முடியவில்லை. அதேவேளையில் எம்பிக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொள்ள பணியில் உள்ள மிக மூத்த அதிகாரியை சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு அனுப்ப தேர்தல் ஆணையம் முன்வந்தது. இதுவரை இப்படி நடந்தது இல்லை. இருப்பினும் எங்களின் இந்த முடிவை எம்பிக்கள் ஏற்கவில்லை.
நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளையும் அதே வேளையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தனது சொந்த விதிமுறைகள் மற்றும் மரபுகளையும் தேர்தல் ஆணையம் மதிக்கிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையத்தை சந்திக்கக் கோரிக்கை விடுக்கலாம். அதன்பிறகு காலத்தை பொறுத்து சந்திப்புக்கான தேதி, நேரம் ஒதுக்கப்படும். இதுதான் வழக்கமான நடைமுறையாகும்'' என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
