சீனாவில் பரவும் மர்ம நோய்.. மத்திய சுகாதார துறை பரபர.. கொரோனாவை போன்ற மற்றொரு பெருந்தொற்று?
டெல்லி: சீனாவில் இப்போது ஹெச்.எம்.பி.வி என்ற மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை போலவே புத்தாண்டு சமயத்தில் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சீனா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் இது ஒரு வழி செய்துவிட்டது.

மாஸ்க், லாக் டவுன் என அந்த சமயம் நாம் பட்ட இடர்பாடுகள் ரொம்பவே அதிகம். அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் வரை ஆனது. இப்போது நாம் கொரோனாவில் இருந்து மீண்டாலும் அது ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் இன்னும் கூட ஆங்காங்கே தொடர்கிறது.
மீண்டும் மர்ம நோய்:
இதற்கிடையே சுமார் 5 ஆண்டுகள் கழித்து சீனாவில் இப்போது மீண்டும் மர்ம நோய் பரவ தொடங்கியுள்ளது. அங்குக் கடந்த மாதம் இறுதியில் திடீரென பலருக்குச் சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கொரோனாவை போல ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுமோ என மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம்:
சீனாவில் இந்த மர்ம நோய் பரவலுக்கு இடையே மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது நமது நாட்டில் சுவாச மற்றும் பருவகால காய்ச்சல் வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தகவலைச் சரிபார்த்து அதற்கேற்ப தேவையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் மீண்டும் மர்ம நோய் பரவ தொடங்கியுள்ள நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இந்த கருத்துகளைக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சீனாவில் இப்போது ஹூமன் மெட்டாப்நிமோ வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், எங்கு இது மீண்டும் கொரோனா போன்ற பெருந்தொற்றை ஏற்படுத்துமோ என்று அஞ்சப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு:
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்திய அதிகாரிகள் கூறுகையில், "டிசம்பர் 16-22 வரையிலான டேட்டாவை வைத்துப் பார்க்கும் போது பருவகால காய்ச்சல், ரைனோவைரஸ், சுவாச வைரஸ் (RSV) மற்றும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (hMPV) உள்ளிட்ட கடுமையான சுவாச நோய்ப் பாதிப்பு அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. வழக்கமாக அங்குக் கோடைக் காலத்தில் இதுபோன்ற பாதிப்பு இருக்கவே செய்யும். எனவே, அங்கு என்ன சூழல் நிலவுகிறது என்பதைக் கண்டறிய நாம் சில காலம் காத்திருக்க வேண்டும்" என்கிறார்கள்.
அறிகுறி என்ன:
சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் காரணமாகவே திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறியாக உள்ளது. மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்பும் கூட ஏற்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை தடுப்பூசியும் இல்லை என்பது சற்று கவலையளிப்பதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications