திடீரென அணுஆயுதத்தை அதிகரித்த இந்தியா.. பின்னுக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்! வெளியான ரிப்போர்ட்
டெல்லி: நம் நாடு திடீரென்று அணுஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) தெரிவித்துள்ளது. மேலும் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (Stockholm International Peace Research Institute) ஆண்டு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் தான் ஒவ்வொரு நாடுகளிடம் இருக்கும் அணுஆயுதம் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த விபரத்தை வெளியிட்டுள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் என்பது கடந்த 1966ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு சுதந்திரமான தனிப்பட்ட அமைப்பாகும். நாடுகளுக்கு இடையேயான மோதல் மற்றும் கையிருப்பில் உள்ள அணுஆயுதம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவ்வப்போது டேட்டாக்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2025ம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த புத்தகத்தில் அணுஆயுதங்கள் குறித்த விபரம் உள்ளது. இதுதொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருந்தன. இது 2025ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்தியாவிடம் இருக்கும் அணுஆயுதத்தின் எண்ணிக்கை 180 ஆக உள்ளது. பாகிஸ்தானிடம் தற்போது 170 அணுஆயுதங்கள் உள்ளன. கடந்த 2024ம் ஆண்டில் பாகிஸ்தானிடம் 170 அணுஆயுதங்கள் தான் இருந்தது. இப்போதும் அதுவே தொடர்ந்து வருகிறது.
மேலும் சீனாவிடம் இந்தியாவை விட 3 மடங்கிற்கும் அதிகமான அணுஆயுதம் உள்ளது. சீனா 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 100 அணுஆயுதங்களை தயாரித்து வருகிறது. சீனாவிடம் மொத்தம் 600 அணுஆயுதங்கள் உள்ளன.
அதேபோல் மேம்பட்ட அணுசக்தி விநியோக அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் புது வகையான அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடர்ந்து இந்தியா உருவாக்கி உள்ளது. இதன்மூலம் அணுஆயுத திறனில் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அணுஆயுத திறன் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் சண்டை நடைபெற்றது. இதுபோன்ற சூழலில் இரு பக்கத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது உலக நாடுகளை கவலை அடையச் செய்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் அதிகளவில் அணுஆயுதங்கள் உள்ளன. உலகில் உள்ள மொத்த அணுஆயுதத்தில் 90 சதவீதம் இந்த 2 நாடுகளிடம் தான் உள்ளது. மேலும் அணுஆயுதம் வைத்திருக்கும் 9 நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரிக்கவும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தவும் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் என்பது அதிகரித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - காசா இடையே போர் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து முடிந்தது. இதுதவிர தற்போது புதிதாக இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தான் அணுஆயுதம் வைத்திருக்கும் ஒவ்வொரு நாடுகளும் அதனை மிகவும் முக்கியமாக பார்க்கின்றன. அதேபோல் ஈரானிடம் அணுஆயுதம் இல்லை. அதனை தயாரிக்க ஈரான் முயன்று வருகிறது. தற்போது ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல ஆண்டு கால பகையோடு சேர்த்து ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியும் முக்கிய காரணமாகும். இதனால் தான் 2 நாட்களுக்கு முன்பு ஈரானில் அணுஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியம் செறிவூட்டு மையத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்கி மோதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications