அமெரிக்கா-ஈரான் இடையே ஓய்ந்த பஞ்சாயத்து.. இந்தியாவுக்கு திறந்த புது வழி! கன்பார்ம் செய்த அஜித் தோவல்
டெல்லி: ஈரான், இந்தியா இடையே ஏற்கெனவே பல பொருளாதார ஒப்பந்தங்கள் இருந்தன. ஆனால் அமெரிக்காவின் குறுக்கீடு காரணமாக இவை அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதனை அஜித் தோவல் மேற்கொண்டிருக்கிறார்.
இன்று ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான டாக்டர் அலி அக்பர் அஹ்மதியனுடன் தொலைப்பேசியில் தோவல் பேசியிருந்தார். இந்த பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த உரையாடலில், சபஹார் துறைமுகம் மற்றும் 'சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம்' (INSTC) திட்டங்கள் குறித்து பேசப்பட்டிருக்கிறது. சபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்திருக்கிறது. எனவே இதனை விரைவில் மேம்படுத்த வேண்டும் என்று அஜித் தோவல் கேட்டுக்கொண்டார். எதிர்பார்க்கப்பட்டபடி துறைமுகம் சிறப்பாக கட்டியெழுப்பப்பட்டால், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் எளிதாக வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.
அதேபோல INSTC திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியா-ஈரான்-ரஷ்யா இடையேயான சரக்கு போக்குவரத்து செலவு 30% வரை குறையும். எனவே இந்த இரண்டு திட்டங்கள் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். இதற்கு பதிலளித்த அலி அக்பர், இரண்டு திட்டங்களையும் முடிந்தவரை விரைவாக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், ஆப்கானிஸ்தான் பிரச்சினை, மத்திய கிழக்கு அமைதி போன்றவற்றில் நேர்மறையான நிலைப்பாடுகளை ஈரான் எடுத்திருப்பதாகவும் தோவல் பாராட்டியிருக்கிறார்.
பதிலுக்கு அலி அக்பர், இந்தியா-ஈரான் இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார பங்களிப்பு மிக அவசியமானது என்றும், அமைதிக்கு இரு தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த உரையாடல் ஏன் மிக முக்கியம் எனில், ஈரானிடமிருந்துதான் இந்தியா கடந்த காலங்களில் கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. ஈரானின் கச்சா எண்ணெய் விலை குறைவு. போதாத குறைக்க சலுகை விலையிலும் ஈரான் நமக்கு விற்பனை செய்து வந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது.
இப்படி இருக்கையில்தான் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் எழுந்தது. ஈரானிடமிருந்து எண்ணெய்யை வாங்க கூடாது என அமெரிக்கா ஆடர் போட.. நாமும் எண்ணெய் கொள்முதலை தவிர்த்துவிட்டோம்.
இப்போது அமெரிக்கா-ஈரான் பஞ்சாயத்து ஓய்ந்திருக்கிறது. எனவே, இந்தியாவுக்கு புதிய வழி பிறந்திருக்கிறது. மீண்டும் எண்ணெய் விற்பனை தொடங்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த வகையில் இந்த உரையாடல் மிக முக்கியமானதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications