அலறப்போகும் பாகிஸ்தான்.. 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா! வெளியான முக்கிய தகவல்
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை நம் நாட்டின் விமானப்படை துல்லியமாக நடத்தியது. இதற்கு பிரான்சிடம் இருந்து நாம் வாங்கிய ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த போர் விமானங்கள் மூலமாக பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. இந்நிலையில் தான் பிரான்சிடம் இருந்து கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க நம் நாடு முடிவு செய்துள்ளது. அதேபோல் இந்த விமானங்களில் இந்தியாவின் பொருட்களை 60 சதவீதம் வரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த தாக்குதல் துல்லியமாக நிகழ்த்தப்பட்டது. இதற்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் உதவி செய்தன.

இந்த விமானங்களில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தான் மீது வீசி அழிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக் சாதனம், பாகிஸ்தான் போர் விமானங்கள் ஏவிய பிஎல்-15 என்ற சீனா தயாரிப்பு ஏவுகணைகளை திசை திருப்பி முட்டாளாக்கியது.
114 ரபேல் விமானம் வாங்க முடிவு
இதனால் ரஃபேல் போர் விமானங்களை மீண்டும் வாங்க நம் விமானப்படை விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி 114 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் தயாரிக்க முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்க முடிவு
ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால், டாடா நிறுவனமும், டஸ்ஸோ நிறுவனமும் இணைந்து ரஃபேல் விமான தயாரிப்பில் ஈடுபடும். அப்போது அதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.
ரஃபேல் போர் விமானத்தின் எம்-88 இன்ஜின்களை பழுது பார்க்கவும், பராமரிக்கவும், ஹைதராபாத்தில் மையம் அமைக்க டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு பற்றி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போது பரிசீலனை என்ற அளவில் மட்டுமே உள்ளது.
பாதுகாப்பு அமைச்சக ஒப்புதல்
சமீபத்தில் இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான திட்டம் விமானப்படை சார்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அது தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு துறையின் நிதி பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையின் கொள்முதல் பிரிவு, பாதுகாப்பு துறையின் கையகப்படுத்துதல் கவுன்சில் (Defence Acquisition Council) உள்ளிட்டவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்படும்.
ஸ்பெஷல் என்ன?
தற்போது இந்தியா வாங்க உள்ள ரஃபேர் போர் விமானம் நவீன தொழில்நுட்பம் கொண்டது. ஸ்டேண்டட் எஃப் 4 பிளஸ் (Standard F4 Plus Versions) வெர்ஷனை சேர்ந்தது. இதன்மூலம் விமானத்தை தாக்க வரும் ஏவுகணை அல்லது நம்நாட்டின் குறிப்பிட்ட இலக்கை தாக்க வானில் பறந்து வரும் ஏவுகணைகளை அழிக்க முடியும்.
அதேபோல் அந்த விமானத்தில் ஏவுகணைகளை சுமந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். அதாவது Air to Air Missiles மற்றும் Air to Ground என்ற 2 வகையான அட்டாக்கை இந்த விமானத்தால் செய்ய முடியும். தற்போது பிரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படையில் எப்4.1 வெர்ஷன் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவிடம் எத்தனை ரபேல் இருக்கு?
தற்போது நம் நாடு பயன்படுத்தும் ரஃபேல் போர் விமானங்களை ஒப்பிடும்போது இந்த விமானங்களுக்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் இதில் செய்யப்பட உள்ளன. இந்திய விமானப்படையில் ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன.
அதேபோல் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்த 36 ரஃபேல்-எம் ரக விமானங்கள் வாங்கவும் பிரான்ஸிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப்படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டால், இந்தியாவிடம் உள்ள ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 176-ஆக அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications