"மோடியிடம் டிரம்ப் பேசவே இல்லை.." ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் நடந்தது என்ன? தெளிவாக விளக்கிய ஜெய்சங்கர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் மோதலை யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடி- டிரம்ப் இடையே எந்தவொரு உரையாடலும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் மிக மோசமான தாக்குதல் நடந்தது. பஹல்காமில் ஊடுருவிய தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் அப்பாவி மக்கள் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

ஆபரேஷன் சிந்தூர் விவாதம்
குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வருகிறது. இன்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பான விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
ஜெய்சங்கர் விளக்கம்
இதற்கிடையே இப்போது ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் மோதலை யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்று அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே எந்தவொரு உரையாடலும் நடக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
குறிப்பாக பஹல்தாம் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை பிரதமர் மோடி-டிரம்ப் இடையே எந்தவொரு உரையாடலும் நடக்கவில்லை என்பதை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்கா உடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன
மேலும், அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் குறித்து ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். அதாவது அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தான் முதலில் பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு பேசியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருவதாகப் பிரதமர் மோடியிடம் அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ் கூறியதாகவும் அதற்கு இந்தியா வலுவாகப் பதிலடி கொடுக்கும் என்று மோடி பதிலளித்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
இது மட்டுமின்றி, பாகிஸ்தான் இந்திய ராணுவ டிஜிஎம்ஓ மூலம் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதை இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும். மே 9,10 தேதிகளில் பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகத் தெரிவித்த ஜெய்சங்கர், மே 10ஆம் தேதி பல நாடுகள் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக இந்தியாவிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
விளக்கம்
இந்தியா பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுவரை குறைந்தது 25 முறை இது குறித்துப் பேசிவிட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாகத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்தச் சூழலில் தான் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்திலேயே இப்போது விளக்கமளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications