இந்தியா வளர்கிறதா? கண்ணிவெடி போல காலை வாரும் ஊதிய பிரச்சனை! மீளா துயரில் நடுத்தர மக்கள்
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் அது வளர்ந்து வருவதாகவும், பங்கு சந்தை முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், நடுத்தர மக்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சம்பள பிரச்சனைதான் அது. இது குறித்து 'இந்தியா டுடே பிளாஷ்' தனது கட்டுரையில் விவரித்திருக்கிறது.
டெல்லியில் பத்திரிகை துறையில் பணியாற்றி பெண் ஒருவர், சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக வேலையிலிருந்து வெளியேறினார். வேறு துறையில் வேலை பார்க்கும் அவர், பத்திரிகை துறையில் இருந்ததை விடவும் அதிக சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிடவும் தற்போது ஏழையாக உணர்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேட்டி கொடுத்திருக்கும் பலரும் தங்களுக்கு போதுமான ஊதியம், சரியான நேரத்தில் ஊதிய உயர்வு, வேலை வாய்ப்புகள் இல்லை என்று கவலை தெரிவிதிருக்கின்றனர்.
நிதி பாதுகாப்பு
முன்பு, நிதி பாதுகாப்பு என்றால் சேமிப்பது மற்றும் எப்போதாவது ஆடம்பரமாக செலவு செய்ய முடிவது என்று அர்த்தம். இப்போது, அடிப்படை செலவுகளை நிர்வகிக்கவும், EMI-களை செலுத்தவும், அவசர காலத்திற்காக கொஞ்சம் பணம் சேமித்து வைக்க முடிவதுமே நிதி பாதுகாப்பு என மாறியிருப்பதாக மற்றொரு இளைஞர் கூறியிருக்கிறார். வெறுமென நான்கு பேரிடம் கருத்து கேட்டு மட்டும் இந்த கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக உலகின் முன்னணி தொழில்முறை சேவைகள் நிறுவனமான 'Aon' நிறுவனத்தின் தரவுகளையும் கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது.
சம்பள உயர்வும் இந்தியாவும்
இந்தியர்களின் 2024-25 ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வு கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு சராசரி சம்பள உயர்வு 9.2% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக 'Aon' கூறியிருக்கிறது. 1,400 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 2022ல் இந்தியாவில் சம்பள உயர்வு 10.6% என இருந்தது. 2024ல் 9.3% ஆக இது குறைந்தது. இப்போது இது 9.2% என்கிற நிலைக்கு வந்திருக்கிறது.
அச்ச உணர்வுடன் ஊழியர்கள்
கடந்த ஆண்டை விட நிறுவனங்கள் இந்த ஆண்டு அதிக லாபத்தை எடுத்திருந்தாலும் கூட, சம்பள உயர்வின் அளவு குறைவாகவே இருக்கிறது. மட்டுமல்லாது இந்தியாவில் ஊழியர்கள் 'அச்ச உணர்வுடன்' இருக்கிறார்கள். வேலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 2022 இல் 21.4% லிருந்து இப்போது 17.7% ஆகக் குறைந்துள்ளது. இதுதான் ஊழியர்கள் அச்ச உணர்வுடன் இருப்பதற்கு காரணம்.
இந்திய வேலை வாய்ப்பு துறை
பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது அல்லது நிச்சயமற்ற தன்மையுடன் இருக்கும்போது, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்காது. வேறு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவதால், இருக்கும் வேலையை இழந்துவிடுவோமோ என்ற பயம், ஊழியர்களை பழைய வேலையிலேயே தக்க வைத்திருக்கும். சம்பளம், சிறந்த சலுகைகள் அல்லது கவர்ச்சிகரமான வேலைச் சூழலைக் கொண்ட பிற வேலைகள் குறைவாக இருந்தால், ஊழியர்கள் தற்போதைய வேலையை விட்டு வெளியேற தயங்குவார்கள். இதெல்லாம் இந்திய வேலை வாய்ப்பு துறையில் இருக்கிறது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
பணவீக்கமும் சம்பள உயர்வும்
இந்த விவகாரம் தொடர்பாக 'foundit' எனும் வேலைவாய்ப்பு இணையதளம் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 5,000 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கிட்டத்தட்ட பாதி பேர் தங்களுக்குக் குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர். வெறும் 28% பேர் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் ஓரளவுக்கு சம்பள உயர்வை பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்கள். மீதமுள்ள 22% பேர், சம்பள உயர்வு இருந்தாலும் அது பணவீக்கத்தை எதிர்கொள்ள மட்டுமே சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
2005லிருந்து மந்த நிலை
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சம்பள உயர்வுக்கு எது அடிப்படையாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? பணவீக்கம் என்று பதில் சொன்னால் அது தவறு. 2005 தொடங்கி இன்று வரை பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு சம்பள உயர்வு கொடுக்கப்படுவதில்லை. மாறாக நிறுவனத்தின் லாபம் மற்றும் ஒரு தொழிலுக்குள் இருக்கும் போட்டி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுதான் போனஸ், இன்கிரிமென்ட் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது.
அறிக்கை வேறு யதார்த்தம் வேறு
இந்தியாவில் அறிக்கையாக சொல்லப்பட்ட பணவீக்கத்திற்கும், யதார்த்தமாக இருக்கும் பணவீக்கத்திற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது என Deloitte India நிறுவனத்தின் பங்குதாரர் ஆனந்தரூப் கோஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "சராசரி ஊதிய உயர்வு நன்றாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறினாலும், உண்மையில் ஊதிய வளர்ச்சியின் அடிப்படையில் 130 நாடுகளில் இந்தியா கீழ் நிலையில் உள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவிதிருக்கிறது" என கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கல்
சம்பள உயர்வு இல்லாதது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக அமைதியாக மாறி வருகிறது. GDP உயர்வு மற்றும் பங்குச் சந்தை ஏற்றம் பற்றி பேசப்பட்டாலும், வேலை செய்யும் இந்தியர்களுக்கான ஊதிய உயர்வு பணவீக்கத்திற்கு ஈடாக இல்லை. இந்த ஏற்றத்தாழ்வு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
சம்பளம் ஏறவில்லையெனில், செலவழிக்கும் திறனும் குறைகிறது. செலவுகள் குறையும்போது, இந்தியாவின் பொருளாதாரத்தை இயக்கும் நுகர்வு இயந்திரம் வேலை செய்யாது. இப்படியே போனால் இலங்கையில் நடந்ததை போன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதேபோன்ற பாதிப்பை எதிர் கொண்டிருக்கிறீர்களா? கமெண்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications