அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய கே-4 ஏவுகணை சோதனை வெற்றி! சத்தமில்லாமல் சாதித்த இந்திய கடற்படை
டெல்லி: அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து அணு ஆயுத்களை தாங்கி செல்லும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் கடல் அருகே இந்த சோதனையை இந்தியா வெற்றிகரமாகச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகில் மிகவும் வலிமையான பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. குறிப்பாக அணு ஆயுத திறன் கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

இந்தியா தனது புதிய ஏவுகணைகளைத் தொடர்ச்சியாகச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே இந்தியா மற்றொரு முக்கியமான ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை: அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து, 3,500 கிமீ தூரம் சென்று துல்லியமாகத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை (SLBM) இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்த இந்த சோதனையில், திட எரிபொருளான SLBM தொடர்புடைய K-4 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து கே 4 ஏவுகணை சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
முதல்முறை: ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து கே-4 ஏவுகணை சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆக. மாதம் தான் ஐஎன்எஸ் அரிகாட் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதற்கு முன்பு வரை கே 4 ஏவுகணை பல ஆண்டுகளாக நீரில் மூழ்கக்கூடிய பான்டூன்கள் வகை கப்பல்களில் இருந்து மட்டுமே சோதனை செய்யப்பட்ட நிலையில், இப்போது முதல்முறையாக ஐஎன்எஸ் அரிகாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சோதனை தொடர்பாக மத்திய அரசு முன்கூட்டியே பொது எச்சரிக்கையை விடுத்து இருந்தது. அதாவது நவம்பர் 27 முதல் 30ம் தேதி வரை இந்த பிராந்தியத்தில் சுமார் 3,490 கிமீ சுற்றளவுக்கு ஏவுகணைச் சோதனை நடைபெறும் என்பதால் பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த சோதனை எந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்தது என்பதைக் கண்டறிய முடிவுகளை விரிவான பகுப்பாய்வு செய்யும் பணிகள் இப்போது நடந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஏன் முக்கியம்: கே 4 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை நாட்டின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் எடுத்துச் செல்ல கூடியதாகும். இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் ஏற்கனவே 5,000-கிமீ தூரம் வரை சென்று தாக்கும் இந்த ரக ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
6,000 டன் எடையுள்ள ஐஎன்எஸ் அரிகாட் என்பது அணுசக்தியால் இயங்கும் இந்தியாவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலாகும். கடந்த 2016ஆம் ஆண்டு அணுசக்தியில் இயங்கும் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், அது 750 கிமீ தூரம் வரை மட்டும் பாய்ந்து சென்று தாக்கக்கூடிய கே-15 ஏவுகணைகளை மட்டுமே கொண்டுள்ளது. அடுத்து இன்னொரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இப்போது கட்டப்பட்டு வரும் நிலையில், அது அடுத்தாண்டு கடற்படையில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications