திடீரென 16,000 வெளிநாட்டினரை நாடுகடத்தும் இந்தியா.. இரவோடு இரவாக பறந்த உத்தரவு.. என்ன காரணம்?
டெல்லி: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரில் சிலர் இங்குக் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாகப் போதைப்பொருள் கடத்தல், விற்பனை எனச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையே இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 16 ஆயிரம் வெளிநாட்டினரை மத்திய அரசு நாடுகடத்தவுள்ளது. இது குறித்து மிக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். இந்தியாவின் வேற்றுமை, அழகு, பிரம்மாண்டம் ஆகியவை அவர்களை மிரள வைத்துவிடுகிறது. பெரும்பாலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டின் இந்த அழகையும் பிரம்மாண்டத்தையும் காணவே வருகிறார்கள்.

குற்றம் செய்யும் வெளிநாட்டினர்
அதேநேரம் அனைவருமே அதற்காக மட்டும் இந்தியாவுக்கு வருகிறார்கள் என சொல்ல முடியாது. சிலர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காகவே இந்தியா வருகிறார்கள். குறிப்பாகப் போதைப்பொருள் கடத்தல், விற்பனை, சப்ளை ஆகியவற்றைச் செய்யவும் கூட சில வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்து பதுங்குகிறார்கள்.
நாடுகடத்தல்
அதுபோல இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் சுமார் 16 ஆயிரம் வெளிநாட்டினரை இந்தியாவில் இருந்து நாடுகடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட இவர்களை நாடு கடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மியான்மர், மலேசியா, கானா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான மத்திய அரசு எடுத்துள்ள மிகப் பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
எங்கே இருக்கிறார்கள்
என்சிபி எனப்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டினர் மீது போதைப்பொருள் கடத்தல் முதல் அவற்றை சப்ளை செய்தது வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள். தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் உள்ளனர்.
நாடு கடத்தப்பட உள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் மூலம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாம். விரைவிலேயே நாடு கடத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் தான் புதிய குடிவரவு சட்டத்தை நிறைவேற்றி இருந்த நிலையில், அந்த விதிகளின் கீழ் இந்த நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்கப்படவுள்ளது.
மத்திய அரசு
முன்னதாக மத்திய அரசு இம்மாதத் தொடக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. போதைப்பொருள் கடத்தல், கொலை, ஆள்கடத்தல், பலாத்காரம் உட்படக் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு நுழையத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை வைத்திருக்கத் தடுப்பு மையங்களை உருவாக்கவும் மாநில அரசுகளுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தச் சூழலில் தான் இரண்டே வாரத்தில் நாடுகடத்தும் நடவடிக்கை தொடங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் காலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் நாடுகடத்தப்படும் நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications