லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?
டெல்லி: பிஸ்னஸ் லோன் எடுத்த பலருக்கும் ஈரான் - அமெரிக்க போர் காரணமாக ஒரு குட் நியூஸ் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை மத்திய அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதன் அலைகள் இந்தியப் பொருளாதாரக் கரைகளையும் பலமாகத் தாக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்து இயங்கும் ஜவுளி மற்றும் கண்ணாடித் தொழில் நிறுவனங்கள், சப்ளை செயின் பாதிப்பால் நிலைகுலைந்து போயுள்ளன.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், இந்தியத் தொழில் துறையில் குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைச் சார்ந்துள்ள நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை உயர்வால் ஜவுளி, கண்ணாடி, தோல் மற்றும் ரசாயனத் தொழில்களில் உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கான செலவு $300-லிருந்து $8,500 வரை பல மடங்கு உயர்ந்துள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகம் முடங்கியதால் விநியோகச் சங்கிலியில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாசுமதி அரிசி, தேயிலை போன்ற ஏற்றுமதிப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இந்த பாதிப்புகளைச் சமாளிக்கவே, சுமார் ₹2.22 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களுக்கு 90% வரை அரசு உத்தரவாதம் அளிக்கும் சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு தற்போது முன்னெடுத்துள்ளது.
உலகிலேயே மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இருக்கும் இந்தியாவுக்கு, இந்தப் போர் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை என்ற இரட்டைச் சவால்களைக் கொடுத்துள்ளது.
கைகொடுக்கும் 'சாவரின் கேரண்டி' (Sovereign Guarantee)!
இந்நிலையில், நலிவடைந்து வரும் தொழில்களைக் காக்க மத்திய அரசு ஒரு அதிரடித் திட்டத்தை வகுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் $26.7 பில்லியன் (சுமார் ₹2.22 லட்சம் கோடி) மதிப்பிலான கடன்களுக்கு மத்திய அரசு 'சாவரின் கிரெடிட் கேரண்டி' (Sovereign Guarantee) வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் இதோ:
பயனாளி: மிடில் ஈஸ்ட் போரால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME).
திட்டக்காலம்: வங்கிகள் வழங்கும் இந்தக் கடன்களுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு அரசு கியாரண்டி அளிக்கும்.
பாதுகாப்பு: ஒருவேளை கடன் வாங்கிய நிறுவனம் திருப்பிச் செலுத்தத் தவறினால் (Default), அந்தத் தொகையில் 90% வரை அரசாங்கமே ஏற்கும்.
உச்சவரம்பு: ₹100 கோடி ($10.75 மில்லியன்) வரையிலான கடன்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
கொரோனா கால 'பாணி' மீண்டும் வருகிறதா?
2020-ல் கொரோனா பெருந்தொற்றின்போது, சுற்றுலா மற்றும் பயணத் துறை உள்ளிட்ட கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டெழ இதே போன்ற கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதே பார்முலாவை இப்போது போர்ச் சூழலுக்கும் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக அரசாங்கத்திற்கு சுமார் ₹17,000 கோடி முதல் ₹18,000 கோடி வரை ($1.83 billion to $1.94 billion) செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வளைகுடா போர்ச் சூழலால் தங்களுக்குக் கூடுதல் சலுகைகள் வேண்டும் எனச் சிறு தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அரசின் இந்த 'கியாரண்டி' அறிவிப்பு அவர்களுக்கு ஒரு சஞ்சீவினியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. போர் மேகங்கள் சூழ்ந்தாலும், இந்தியத் தொழில் துறையின் விளக்கு அணையாமல் இருக்க இந்த முன்னெடுப்பு அவசியம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்!












Click it and Unblock the Notifications