14% சரிந்தது மோடி செல்வாக்கு.. மாநில கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகரிப்பு- இந்தியா டுடே சர்வே
டெல்லி: இந்தியா டுடே ஊடக நிறுவனம், மூட் ஆப் தி நேஷன் அதாவது நாட்டு மக்களின் மனநிலை என்ற பெயரில் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே சற்று கவலை தரக் கூடிய விஷயமாக உள்ளது. பிராந்திய அளவில் உள்ள கட்சிகள் ஆதிக்கத்தை அதிகப்படுத்தி வருவதை இதில் புரிந்து கொள்ள முடிகிறது.
Recommended Video
இந்தியா டுடே ஊடகம் ஆண்டுக்கு இரு முறை, இதுபோன்ற சர்வே முடிவுகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சர்வே இவ்வாண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதிவரை நடத்தப்பட்ட 2வது சர்வே தற்போது வெளியாகியுள்ளது.
115 லோக்சபா தொகுதிகள், 230 சட்டசபை தொகுதிகள் என மொத்தம் 19 மாநிலங்களில், 14,559 பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள், கொரோனாவை கையாண்ட விதம், நமது பொருளாதார நிலைமை போன்றவை குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது.

சிறந்த பிரதமர் வேட்பாளர் யார்
சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு கிடைத்துள்ள பதில்களை வைத்து பார்த்தால் நரேந்திர மோடிக்கு கடந்த ஜனவரி மாதத்தில் கிடைத்த செல்வாக்கை விட இப்போது 14 சதவீதம் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வருகிறது. ஜனவரி மாதம் 38 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போது வெளியாகியுள்ள சர்வேயில், மோடிக்கு ஆதரவு 24 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரம், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்போர் 10 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக உயர்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி செல்வாக்கு 3 சதவீதம் உயர்ந்து இப்போது 10 சதவீதம் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

மாநில கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு
அதேநேரம், ஒட்டுமொத்தமாக மத்தியில் ஆள வேண்டும் என்று மக்கள் நினைக்கும் கட்சி எது என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் பாஜக எனக் கூறியுள்ளனர். இது ஜனவரி மாதம் 56 சதவீதமாக இருந்தது. அதாவது 14 சதவீதம் மக்கள், ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து மாறிவிட்டனர். அதே நேரம், காங்கிரஸ் கட்சி ஆள வேண்டும் என்று ஜனவரி மாதம் 14 சதவீதம் பேர் கூறிய நிலையில், இப்போது அது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், பிராந்திய கட்சிகள் ஆள வேண்டும் என்று நினைப்போர் விகிதம் விறுவிறுவென அதிகரித்துள்ளது. ஆம்.. ஜனவரி மாதம் 9 சதவீதம் பேர் இவ்வாறு கூறிய நிலையில் இப்போது அது 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது 7 சதவீதம் பேர் கூடுதலாக ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக ஆதரவு நிலைப்பாடு குறைவது காங்கிரசை விட பிராந்திய கட்சிகளுக்கு அதிக ஆதரவை ஈட்டித் தருகிறது என்பதே இந்த சர்வே சொல்லும் பாடம்.

ராகுல், பிரியங்கா
சோனியா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரசில் இல்லாமல் இருப்பது கட்சிக்கு நல்லது என்று, 45 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கடந்த சர்வேயைவிட 7 சதவீதம் குறைவாகும். ஆம், சோனியா காந்தி வாரிசுகள் மீதான அதிருப்தி சற்று குறைந்துள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு சற்று ஆதரவு அதிகரிக்க காரணம், பஞ்சாப் அரசியல் பிரச்சினையை நல்லபடியாக சமாளித்து கட்சி உடையாமல் பார்த்துக் கொண்டனர் என்பதால்.

டாப் 5 முதல்வர்கள் யார்
மாநில முதல்வர்கள் குறித்து மதிப்பீடு செய்ய மக்களிடம் கேட்டபோது, டாப் 5 முதல்வர்களுமே மாநில கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரளா முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்ரே மற்றும் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி ஆகியோர் மக்களிடம் அதிக ஆதரவு கொண்ட முதல்வர்களாக உள்ளனர். இவர்கள் ஆளும் மாநிலங்களில் தேசிய கட்சிகளை விட சிறப்பாக நிர்வாகம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

பாஜக, காங்கிரஸ்
டாப் 11 லிஸ்டில், ஹிமாந்த பிஸ்வா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகிய பாஜகவைச் சேர்ந்த முதல்வர்களும், அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகல் ஆகிய காங்கிரசைச் சேர்ந்த முதல்வர்களும் உள்ளனர். யோகி ஆதித்யநாத்தின் பாசிட்டிவ் ரேட்டிங் 29 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், பாதிக்கு பாதி மக்கள் கூட யோகிக்கு ஆதரவாக இல்லை என்பது பாஜகவுக்கு நெருடலான விஷயம்தான்.

இரு தேசிய கட்சிகளின் பிரச்சினை
பாஜகவை பொறுத்தளவில் விலைவாசி ஏற்றம்தான் மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை குறைக்க காரணம் என்பது சர்வே சொல்லும் பாடம். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை பொருளாதார ரீதியாக துன்பத்தில் இருந்து மீட்க வேண்டிய நடவடிக்கையை மத்திய அரசு செய்தால்தான் இந்த அதிருப்தி மாறும். காங்கிரசை பொறுத்தளவில், கட்சியின் தலைமை பிரச்சினையை சீக்கிரமே தீர்க்க வேண்டியது கட்டாயம். மக்கள் சார்ந்த பிரச்சினைகளை பொது வெளியில் கிளப்ப வேண்டியதும் அதன் வளர்ச்சிக்கு அவசியம். பிராந்திய கட்சிகள் வளர்வது காங்கிரசுக்கு தேசிய அளவில் பின்னடைவைத் தரக்கூடும்.












Click it and Unblock the Notifications