அமெரிக்காவுக்கு வரி ஜீரோ? இந்தியா போட்ட டீல் சூட்சுமமே இதில் தான் இருக்கு! ரொம்ப முக்கியமான பாயிண்டு
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியா மீதான வரிகள் 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு அமெரிக்கா மீதான வரிகளும் ஜீரோவாக குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நீண்ட காலமாகக் கையெழுத்தாகும் எனச் சொல்லப்பட்டு வந்தது. இந்த டீல் இப்போது முடியும்.. அப்போது முடியும் என நீண்ட காலமாகவே இழுபறியில் இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றிரவு யாருமே எதிர்பார்க்காத வகையில் வர்த்தக டீல் இறுதியாகிவிட்டதாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அறிவித்தார்.

இந்தியா அமெரிக்கா
இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும். அதேபோல ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்கான வரியும் ஜீரோ சதவிகிதமாகக் குரைக்கப்பட்டது. பதிலுக்கு, அமெரிக்கப் பொருட்களுக்கான இந்தியாவின் இறக்குமதி வரிகள் மற்றும் பிற தடைகள் ஜீரோவாக குறைக்கப்படலாம். உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க நீண்ட காலமாக வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரி விதித்து வந்த நிலையில், அந்த நிலைப்பாடு இப்போது மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.
டிரம்ப்
டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகக் குறிப்பிட்டார். மோடியை "சிறந்த நண்பர் மற்றும் சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய தலைவர்" என்று அவர் பாராட்டினார். இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கப் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறினார். இந்த நடவடிக்கை உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிவிப்பு என்ன!
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் அமெரிக்காவின் பொருட்களுக்கு நாம் வரியை ஜீரோவாக குறைக்க ஒப்புக்கொண்டது. அதாவது இந்த டீல்படி உடனடியாக அமெரிக்கப் பொருட்களுக்கான வரி குறையாது. மாறாகச் சில அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்பதன் கொள்கை ரீதியான உறுதியளிப்பு தான் இது. மேலும், உரிம விதிகள், சான்றிதழ் தேவைகள், உள்ளூர் கொள்முதல் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் போன்ற பல கட்டுப்பாடுகளைத் தான் தடைகள் எனக் குறிப்பிடுகிறார்கள். அதுவும் கூட முழுமையாக நீக்கப்படும் என்பதே டீலின் அடிப்படையாகும்.
பிரதமர் மோடி
அதேநேரம் இந்த வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான எந்தத் திட்டத்தையும் இந்தியா பொதுவெளியில் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி இந்த டீலை வரவேற்று, இது "மேட் இன் இந்தியா" திட்டத்தை ஊக்கமளிக்கும் என்று கூறினார். அதேநேரம் அமெரிக்கப் பொருட்களின் வரி ஜீரோாக்குவது மற்றும் பிற வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பாகப் பிரதமர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் நேற்று அறிவிக்கப்பட்டபோதிலும் ஒப்பந்தத்தின் பல அம்சங்கள் இன்னும் தெளிவாக இல்லை. வர்த்தகத் தடைகள் எப்படிக் குறைக்கப்படும்.. எந்த அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்தது என்பதில் தெளிவு இல்லை. வரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications