கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள்.. கடலுக்கு அடியில் இருந்தாலும் விடமாட்டோம்! ராஜ்நாத் சிங் சூளுரை
டெல்லி: இந்தியாவுக்கு வந்த வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கடலின் ஆழத்தில் இருந்தாலும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 3 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். செங்கடல் மற்றும் அரபிக்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் கப்பல்களை கடத்துவது போன்ற நாசவேலைகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், செங்கடல் மற்றும் அரபிக் கடலின் மேற்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலில் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிக கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லைபீரியா நாட்டு கொடி ஏற்றப்பட்ட 'எம்வி செம் புளூட்டோ' என்ற சரக்கு கப்பல் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியாவின் மங்களூரு நோக்கி வந்தது. இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய இந்த கப்பலில் 21 இந்தியர்கள் மற்றும் நேபாள நாட்டுக்காரர் ஒருவர் என மொத்தம் 22 மாலுமிகள் இருந்தனர்.
இந்த கப்பல் குஜராத்தின் போர்பந்தர் கடற்கரையிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் அரபிக் கடலில் சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலில் தீப்பற்றியது. மேலும் இந்த தாக்குதலில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்ததுடன், கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கப்பலின் மின்வினியோகம் தடைப்பட்டு கப்பல் தொடர்ந்து இயங்க முடியாமல் நின்றுபோனது.
உடனடியாக இந்திய கடலோர காவல்படையின் ஐசிஜிஎஸ் விக்ரம் கப்பல் உடனடியாக சரக்கு கப்பல் இருக்கும் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சரக்கு கப்பல் பாதுகாப்பாக இருப்பதாகவும், மாலுமிகள் அனைவரும் நலமாக உள்ளதாகவும் இந்திய கடலோர காவல்படை கூறியது. தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான எம்வி கெம் புளூட்டோ கப்பல் 21 இந்தியர்கள் மற்றும் ஒரு வியாட்நாமிய பணியாளர்களுடன் மும்பை துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

தாக்குதல் சம்பவங்கள் காரணமாக, வழிகாட்டுதல்களுக்காக ஐஎன்எஸ் மோர்முகாவ், ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய மூன்று கப்பல்களை அரபிக்கடல் பகுதியில் இந்தியா நிலை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்கு காரணமானவர்களை இந்தியா கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது:- வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலின் ஆழத்தில் இருந்தாலும் இந்தியா கண்டுபிடிக்கும். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரபிக்கடலில் எம்.வி செம் புளுட்டோ என்ற கப்பல் மீதும், செங்கடலில் எம்.வி சாய் பாபா என்ற கப்பல் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை யார் முன்னெடுத்திருந்தாலும், அவர்கள் கடலுக்கு அடியில் இருந்தாலும் கண்டுபிடிப்போம். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை நீதியின் முன் நிறுத்துவோம். இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை இந்தியாதான் வழங்கி வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications