சீனாவை பார்த்து காப்பி அடித்த பாகிஸ்தான்! இந்திய போர்க்கப்பலை வீழ்த்த முயற்சி! இப்போ என்னாச்சு பாருங்க
டெல்லி: அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர்க்கப்பலை பாகிஸ்தான் கடற்படை கப்பல் அதிவேகமாக நெருங்கி வந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கப்பல்களில் சக்திவாய்ந்த ரேடார்கள், வழிகாட்டும் கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் இருக்கும் நிலையில், இது போன்ற சம்பவம் வெறும் விபத்தாக நடந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் மோதல் போக்கே நிலவும். எல்லை மீறி தாக்குதல் நடத்துவது, பயங்கரவாதிகளை எல்லை தாண்டி இந்தியாவுக்கு அனுப்புவது என தொடர்ந்து மோசமான சம்பவங்களில் பாகிஸ்தான் ஈடுபடும். இந்தியா அமைதியாக இருக்கும் போதிலும் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறும். அதற்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

விபத்து
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அதாவது இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை பாகிஸ்தான் கடற்படை கப்பல் அதிவேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கப்பல்கள் என்பது வெறும் கப்பலாக மட்டும் கருத முடியாது. அதில் சக்திவாய்ந்த ரேடார்கள், வழிகாட்டும் கருவிகள் என பாதுகாப்பு தொடர்பான அதிமுக்கிய கருவிகள் இருக்கும் சூழலில், பாகிஸ்தான் கப்பல் மோதியதை வெறும் விபத்தாக மட்டும் கருத முடியாது என்கிறார்கள்.
இது விபத்து அல்ல என்றும் கடலில் நடத்தப்படும் ஒரு வகையான அச்சுறுத்தல் நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் பாதுகாப்புத்துறை நிபுணருமான சந்தீப் உன்னிதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது விபத்து அல்ல. இது அச்சுறுத்தல் மற்றும் ஆக்ரோஷத்தின் ஒரு பகுதியாகும். பொதுவாக சீன ராணுவம் தான் இதுபோன்ற யுத்திகளை பயன்படுத்தும். இப்போது பாகிஸ்தான் ராணுவமும் அதே யுக்தியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சீனாவின் யுக்தி
சீனா, தென் சீன கடல் மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுடன் சீனா இதுபோன்ற யுக்தியை தான் பயன்படுத்தும். இந்த நாடுகளை சேர்ந்த கப்பலுக்கு மிக அருகில் சென்று அதன் பாதையை மறிப்பது, குறுக்காக செல்வது அல்லது மோதும் சூழலை உருவாக்குவது ஆகியவற்றை சீனா தான் செய்யும்.
இப்போது பாகிஸ்தானும் அதை செய்ய ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் கடற்படை சீனாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் பயன்படுத்துவதுடன், சீனாவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் சீனா தனது கடல் நடவடிக்கை உத்திகளை பாகிஸ்தானுக்கு கற்று கொடுத்திருக்கும் என கூட சொல்லலாம்.
என்ன நடந்தது!
கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச கடல் பகுதியில், ஓமன் வளைகுடாவில் இருந்து சுமார் 120 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்திய கடற்படையின் முக்கிய போர்க்கப்பலை நோக்கி அதிவேகமாக வந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் கப்பல் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே மோதல் ஏற்பட்டதாகவும் இந்திய தரப்பு கூறியுள்ளது.
சேதம் யாருக்கு
இந்திய கப்பல் மீது மோதினாலும் கூட இந்திய கப்பலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லையாம். மாறாக பாகிஸ்தான் கப்பலுக்கே சேதம் ஏற்பட்டதாம் இதையடுத்து அந்த கப்பல் பாகிஸ்தான் துறைமுகத்தை நோக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய போர்க்கப்பல் 7,000 டன்களுக்கும் அதிகமான எடை கொண்டது. அதேநேரம் பாகிஸ்தான் கப்பல் 2,600 டன் எடை கொண்ட கண்காணிப்பு கப்பலாகும். இரு கப்பல்களின் எடை மற்றும் அளவில் இவ்வளவு பெரிய வேறுபாடு இருந்ததால் இந்த மோதலில் பாகிஸ்தான் கப்பலுக்கே அதிக சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்தம்
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடலில் இதுபோன்ற ஆபத்துகளை தவிர்ப்பதற்காக ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது. 1991ஆம் ஆண்டு இரு நாடுகளும் செய்த ஒப்பந்தப்படி, சர்வதேச கடல் பகுதியில் இரு நாடுகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுக்கொன்று 3 கடல் மைலுக்கு, அதாவது சுமார் 5.5 கி.மீ. தொலைவுக்குள் நெருங்கக்கூடாது. இந்த ஒப்பந்தத்தை மீறியே பாகிஸ்தான் விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications
