RAC தொல்லை இனியும் இல்லை.. பெர்த் இல்லை என்றாலும் முழு டிக்கெட் கட்டணம் ஏன்? விதிகளில் வரும் மாற்றம்
டெல்லி: ரயில்களில் கன்பார்ம் டிக்கெட் கிடைக்காதபோதும், பயணத்தை உறுதி செய்ய உதவும் RAC முறையை ரத்து செய்வது குறித்து இந்திய ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த RAC முறையில் பெர்த் கிடைக்கவில்லை என்றாலும் பயணிகள் முழு கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாகவே அதை நீக்குவது குறித்து ரயில்வே பரிசீலனை செய்து வருகிறது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. சவுகரியமாக பயணிக்கலாம், எந்தவொரு முக்கிய இடத்திற்கும் பயணிக்கலாம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் ரயில்களில் செல்ல விரும்புகிறார்கள். இந்தியாவில் ரயில்வே முன்பதிவில் உள்ள ஒரு முறை தான் RAC அதாவது Reservation Against Cancellation.

RAC டிக்கெட்கள்
1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட RAC முறை, முழுமையான படுக்கை வசதி கிடைக்காத பயணிகளுக்கும் ரயிலில் பயணம் செய்ய அனுமதி அளிக்கிறது. இந்த முறையில் பொதுவாக இரண்டு பயணிகளுக்கு ஒரு பக்கவாட்டு கீழ் படுக்கை ஒதுக்கப்படும். பகல் நேரத்தில் அது அமரும் இடமாகவும், இரவில் இருவரும் பெர்த்தை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் அது பயன்படுத்தப்படுகிறது.
இதில் பிரச்சினை என்னவென்றால், இரண்டு பயணிகளிடமும் முழுமையான டிக்கெட் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவரை போல தனித்தனியாக பெர்த் வசதி கிடைப்பதில்லை. குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களில் இரவில் ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்வது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் சம்பந்தமே இல்லாத இருவர் ஒரே பெர்த் என்பது சங்கடத்தையே ஏற்படுத்தும். மேலும், படுக்கை வசதி வழங்கப்படாதபோது முழுக் கட்டணம் வசூலிப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாகவே RAC முறையை மறுபரிசீலனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரிந்துரை
RAC கட்டணம் தொடர்பான விவாதம் இப்போது புதிதாக எழுந்ததல்ல. நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு ஏற்கெனவே இந்த விவகாரத்தை ஆய்வு செய்துள்ளது. 2026 பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகும் RAC நிலையிலேயே இருக்கும் பயணிகளிடம் எப்படி முழு கட்டணம் வசூலிக்கலாம் என கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. பெர்த் கிடைக்காமல் RAC நிலையிலேயே பயணம் செய்யும் பயணிகளுக்கு, டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி வழங்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.
பெர்த்
ரயில்வே விதிகளின்படி, RAC பயணிகளால் குறிப்பிட்ட பயணத்தை மேற்கொள்ள முடியும். ஆனால் தனிப்பட்ட பெர்த் கிடைக்காது. யாராவது கடைசி நிமிடத்தில் தங்களது கன்பார்ம் டிக்கெட்டை ரத்து செய்தால் அல்லது பயணத்தின்போது படுக்கை காலியானால், அது RAC பயணிக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் RAC டிக்கெட் கன்பார்ம் டிக்கெட்டாக மாறவும் வாய்ப்புள்ளது. வெயிட்டிங் லிஸ்ட் பட்டியலில் இருப்பவர்களுக்கும் RAC பயணிகளுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. அதாவது வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளில் ரயில்களில் ஏற கூட முடியாது. ஆனால், RAC பயணிகள் ரயிலில் பயணம் செய்யலாம்.
ஆலோசனை
அதாவது இதில் இரண்டு வாதங்கள் உள்ளன. முதலில் பெர்த் ஒதுக்கப்படாத நிலையில், முழுமையான கட்டணம் வசூலிப்பது நியாயம் தானா? என்பது முதல் கேள்வி. அதேநேரம் RAC பயணிகளால் ரயில்களில் பயணிக்க முடியும். இறுதி நிமிடத்தில் பெர்த் காலியாகும்போது பெர்த் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமா என்பது இரண்டாவது கேள்வி!
இதன் காரணமாகவே RAC முறையை மாற்றி அமைப்பது குறித்து ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. அதேநேரம் இதுவரை இந்தியன் ரயில்வே இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை தற்போதைய RAC விதிகளே தொடரும்.




Click it and Unblock the Notifications
