இங்கிலாந்தில் பரவும் இந்திய திரிபு வைரஸ்.. தடுப்பூசிக்கு எதிராக செயல்படுகிறதா.. நிபுணர்கள் ஆராய்ச்சி
டெல்லி: இந்தியாவின் புதிய திரிபு வைரஸ் இங்கிலாந்து நாட்டில் பல மக்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக செய்லபடுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா கோரத் தாண்டவமாடி வருகிறது. உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பிலும், தினசரி உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, மகாரஷ்டிரா, டெல்லி என ஏறக்குறைய பாதிப்பு அதிகம் இல்லாத மாநிலங்களே இல்லை என்று கூறலாம். தொற்று அதிகரித்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பாடாய்படுத்தும் கொரோனா
இது தவிர நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருப்பதால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வர இறுதி நாட்கள் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவின் நிலையை பார்த்து பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

புதிய திரிபு வைரஸ்
இந்தியாவில் புதிய திரிபு வைரஸ் உருவாக்கியதே கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்க காரணம் என்று மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் மகாராஷ்டிராவின் விதர்பா நகரத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது பி .1.617 என பெயரிடப்பட்ட புதிய திரிபு வைரஸ். இந்தியாவில் கொரோனா வைரசின் எழுச்சிக்கு புதிய திரிபு வைரசை காரணமாக இன்னும் உறுதியாக விஞ்ஞானிகள் கூறவில்லை.

உலக நாடுகளுக்கு பரவல்
ஆனால் விதர்பா போன்ற சில பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிப்பதற்கு இது முதன்மைக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இந்த இந்திய திரிபு வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட குறைந்தது 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.புதிய திரிபு வைரஸ் தங்கள் நாட்டில் பரவி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு உலக நாடுகள் தங்கள் மக்கள் இந்தியாவுக்கு செல்வதற்கும், இந்தியாவில் இருப்பர்கள் அங்கே செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் சோதனை
இந்த நிலையில் இந்தியாவின் புதிய திரிபு வைரஸ் இங்கிலாந்து நாட்டில் பல மக்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கும் தடுப்பூசி இந்தியாவின் புதிய திரிபு வைரஸை கட்டுப்படுத்துகிறதா? என்பதை அறிய இத்திய வைரஸின் மாதிரியை இங்கிலாந்தில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பரிசோதனை அவசியம்
தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்த புதிய திரிபு வைரசுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதாக தொற்று நோய் நிபுணர்களில் ஒருவரான மிஸ்ரா தெரிவித்தார். ஆனால் ஃபைசர் அல்லது மாடர்னா போன்ற பிற தடுப்பூசிகளுக்கு எதிராக இந்திய திரிபு வைரஸ் செயல்படுகிறதா? என்பதை அறிய சோதனை செய்யப்படுவது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications