2060ல் உச்சம் தொடும் இந்திய மக்கள் தொகை! 170 கோடியை எட்டுமாம்.. ஆனால் சீனாவின் நிலை ரொம்பவே மோசம்
டெல்லி: உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், வரும் காலத்தில் உலக மக்கள் தொகை எப்படி இருக்கும் என்பது குறித்து ஐநா முக்கிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவில் தான் மக்கள் தொகை இந்த நூற்றாண்டில் மிக மோசமாகச் சரியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை சரிவு கணிசமாக இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.
உலகில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மக்கள் தொகை தினம் நேற்று ஜூலை 11இல் கடைப்பிடிக்கப்பட்டது.

இதற்கிடையே அன்றைய தினம் வரும் காலத்தில் உலக மக்கள் தொகை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஐநா சில முக்கிய ரிப்போர்ட்களை பகிர்ந்துள்ளது.
மக்கள்தொகை: அதில் இந்தியாவின் மக்கள்தொகை 2060களின் முற்பகுதியில் 170 கோடியை எட்டும் என்றும் அதன் பிறகு 12% வரை அது குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டு முழுவதும் இந்தியா தான் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை குறித்த ரிப்போர்ட் ஒன்றை ஐநா வெளியிட்டு இருந்தது. இப்போது 2024இல் உலக மக்கள் தொகை 820 கோடியாக இருக்கும் நிலையில், உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் 2080களின் நடுப்பகுதியில் அது அதிகபட்சமாக 1030 கோடியை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் உச்சத்தை அடைந்த பிறகு, உலக மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும் இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 1020 கோடியாகக் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா எங்கே: உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் லிஸ்டில் சமீபத்தில் தான் சீனாவை இந்தியா ஓவர்டேக் செய்து இருந்தது. இதற்கிடையே இந்த நூற்றாண்டு முழுக்க இந்தியாவே உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று ஐநா ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ரிப்போர்ட்டில், "இந்த நூற்றாண்டு முழுவதும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். இந்திய மக்கள் தொகை 2060களின் முற்பகுதியில் அதிகபட்சமாக 170 கோடியை எட்டும். அதன் பிறகு அதன் மக்கள் தொகை 12% வரை குறையும்" என்று கூறப்பட்டுள்ளது.
150 கோடியைத் தொடும்: தற்போது இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கிறது. இது சுமார் 170 கோடியை எட்டி மீண்டும் இந்த நூற்றாண்டின் இறுதியில் 150 கோடியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. மக்கள் தொகை குறைந்தாலும் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.
சீனா நிலை மோசம்: அதேநேரம் இத்தனை காலமாக உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியாக இருக்கிறது. அது வரும் காலத்தில் மேலும் குறையும் என்றும் 2054இல் அது 121 கோடியாகக் குறையும் என்றும் இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 63 கோடியாகச் சரியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
"முதலில் அழியப்போகும் 5 நாடுகள்.." கடைசி நாடு ரொம்ப பெரிய ஷாக்.. லிஸ்டில் இந்தியா இருக்கா? பகீர்
சீனா குறித்து அந்த ரிப்போர்ட்டில், "தற்போது உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவின் மக்கள் தொகை வரும் 2024 முதல் 2054 வரை மிகப் பெரியளவில் சரியும். இந்த காலகட்டத்தில் சீன மக்கள் தொகை சுமார் 20 கோடி வரை குறையும். அதேபோல ஜப்பான் மக்கள் தொகை 2.1 கோடியும், ரஷ்யா ஒரு கோடி வரையும் குறையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டு முழுவதும் பார்க்கும் போது உலகில் சீனாவில் தான் மக்கள் தொகை சரிவு மிக மோசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் சீன மக்கள் தொகையில் சுமார் 70 கோடி வரை சரியும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications