பாகிஸ்தானால்.. நிமிடத்திற்கு 8,500 அடி வரை உயரத்தை குறைத்த இண்டிகோ விமானம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியது
டெல்லி: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம், கடுமையான ஆலங்கட்டி மழை மற்றும் டர்புலன்ஸில் சிக்கியது. பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், அந்நாடு அனுமதி மறுத்தது. இதனால் விமானம் நிமிடத்திற்கு 8,500 அடி வரை உயரத்தை குறைத்துள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும்.
277 பயணிகளின் உயிரை நூலிழையில் விமானி காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும் விமானத்தின் முன்புறம் சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்து துறை, இண்டிகோ விமானம் எப்படி தப்பியது என்பது குறித்து விளக்கியுள்ளது.

இண்டிகோ விமானம் 6E-2142, டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு பதான்கோட் வழியாக கடந்த புதன்கிழமை மாலை சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பஞ்சாப் அருகே எதிர்பாராமல் விமானம் ஆலங்கட்டி மழைக்கு நடுவே சிக்கியது. மட்டுமல்லாது கடுமையான டர்புலன்ஸையும் எதிர்கொண்டது. இந்த பாதிப்பிலிருந்து விமானத்தை காப்பாற்ற, பாகிஸ்தான் நோக்கி விமானத்தை திருப்ப வேண்டும் என்று இந்தியாவின் வடக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திடம் விமானி கேட்டிருந்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் பாகிஸ்தான் விமான போக்குவரத்து மையத்தை தொடர்பு கொண்ட விமானி, சர்வதேச வான்வழியை பயன்படுத்த அனுமதிக்க கோரியிருந்தார். ஆனால் பஹல்காம் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து இந்தியா மேற்கொண்டிருந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இரு நாடுகளும் அண்டை நாட்டு விமானங்களுக்கு தங்களது வான் பரப்பை மூடியுள்ளது. எனவே பாகிஸ்தானும் இண்டிகோ விமானத்திற்கு அனுமதியை கொடுக்கவில்லை.
விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்ப முடியாது. நீண்ட தூரம் வந்தாகிவிட்டது. எனவே தூரம் குறைவாக உள்ள வழியில் விமானத்தை ஸ்ரீநகர் நோக்கி விமானி திருப்பியிருக்கிறார்.
இந்த முயற்சியின்போது விமானி பல சிக்கல்களை எதிர்கொண்டார். காற்று திடீரென கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் வீசியுள்ளது. இதனை ஆங்கிலத்தில் updrafts and downdrafts என்று கூறுவார்கள். இதனால் விமானங்கள் திடீரென மேலே உயரும். அதேபோல திடீரென கீழ்நோக்கி தள்ளப்படும். கடந்த 1985ம் ஆண்டு டெல்டா விமானம் கீழ் நோக்கிய காற்றால் விபத்தில் சிக்கியிருந்தது. இதேபோன்ற பாதிப்பை இண்டிகோ விமானியும் எதிர்கொண்டார்.
எனவே ஆட்டோ பைலட் மோட்-ஐ ஆஃப் செய்த விமானி, உடனடியாக விமானத்தின் உயரத்தை குறைத்தார். விமான பயணம் மென்மையாக இருக்க வேண்டும் எனில் விமானம் 500-1,500 fpm என்கிற அளவுக்குதான் உயரத்தை குறைக்க வேண்டும். அதாவது நிமிடத்திற்கு 500-1,500 அடி வரை உயரத்தை குறைக்கலாம். மேலே சொன்ன டெல்டா விமானம் நிமிடத்திற்கு 1,800 அடி அளவுக்கு உயரத்தை குறைத்ததால் விபத்தில் சிக்கியது. அதேபோல இண்டிகோ விமானம் நிமிடத்திற்கு 8,500 அடிவரை உயரத்தை குறைத்திருந்தது என விமான போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.
இதனால் விமானம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. விமானத்தின் மூக்கு பகுதி உடைந்திருப்பதற்கு கூட இதுதான் காரணம். இந்த தருணத்தில் விமானம் கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்திருந்தாலும் கூட, மிகப்பெரிய விபத்தில் சிக்கியிருக்கும். ஆனாலும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, பயணிகளை காப்பாற்றியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications