யாருக்கும் தெரியாத ரகசிய ஆபரேஷன்! ரூ.31,500 கோடி எல்ஐசி பங்குகளை மத்திய அரசு விற்றது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ரூ.31,500 கோடி மதிப்பிலான பங்குகளை மத்திய அரசு அண்மையில் பங்குச்சந்தையில் விற்று முடித்துள்ளது. இந்தியாவின் பங்குச்சந்தை வரலாற்றிலேயே இது மிகப்பெரிய பங்கு விற்பனையாகக் கருதப்படுகிறது.

ஆனால், இந்த பிரம்மாண்டமான நடவடிக்கை மிக மிக ரகசியமாகவும், மின்னல் வேகத்திலும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதில் இருக்கும் சுவாரசியமான விஷயம்.

LIC

பங்குச்சந்தையில் ஆலோசனை வழங்கும் நிபுணர்கள், டிரேடர்கள் என யாருக்குமே தெரியாமல் இந்த விற்பனை எவ்வாறு சாத்தியமானது என்பதை இங்கு பார்ப்போம்.

திடீர் அழைப்பும் சொல்லப்படாத காரணமும்:

டெல்லியில் உள்ள மத்திய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் (DIPAM) அலுவலகத்திற்கு, அரசுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முக்கிய முதலீட்டு வங்கியின் அதிகாரி அவசரமாக அழைக்கப்பட்டார். அவர் அலுவலகத்திற்குள் செல்லும் வரை எதுக்காக அழைக்கப்படுகிறோம் என்பது அவருக்குத் தெரியாது.

அவர் உள்ளே சென்ற பிறகுதான், "இன்றிரவே எல்ஐசியின் பங்குகளை அரசு விற்பனை செய்யப் போகிறது, அதற்குரிய ஆவணங்களை உடனடியாகத் தயார் செய்யுங்கள்" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசின் மிகச் சிறிய உயர் அதிகாரிக் குழுவிற்கு மட்டுமே இந்தத் திட்டம் முன்கூட்டியே தெரிந்திருந்தது.

அரசு ஏன் இவ்வளவு ரகசியம் காத்தது?

வழக்கமாக ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகளை அரசு விற்கப்போகிறது என்பது சந்தைக்கு முன்கூட்டியே தெரிந்தால், டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அந்த பங்கின் விலையைக் குறைக்க திட்டமிடுவார்கள் இதை Short Selling) என்பார்கள். இதனால் பங்குச்சந்தையில் எல்ஐசியின் பங்கு விலை கடுமையாகச் சரியும் அபாயம் இருந்தது.

இந்த வீழ்ச்சியைத் தவிர்க்கவே, பங்கு விற்பனை தொடங்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டன.

இலவசமாகப் பணியாற்றிய வங்கிகள்:

இந்த பங்கு விற்பனை நடவடிக்கையில் மற்றொரு ஆச்சரியமான விஷயமும் நடந்தது. அரசுக்கு ஆலோசனை வழங்கிய நான்கு பெரிய முதலீட்டு வங்கிகளும் இந்த ரூ.31,500 கோடி ஒப்பந்தத்திற்காக அரசிடமிருந்து எந்தக் கட்டணமும் வாங்கவில்லை.

ஒரு முதலீட்டு வங்கி கட்டணம் ஏதுமின்றி பணியாற்ற முன்வந்ததால், போட்டி காரணமாக மற்ற வங்கிகளும் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தன. இவ்வளவு பெரிய அரசு ஒப்பந்தங்களில் கட்டணமின்றி பணியாற்றுவது, சர்வதேச அளவில் அந்த வங்கிகளின் நற்பெயரையும் தரவரிசையையும் உயர்த்துவதோடு, அரசுடன் நீண்டகால உறவை பேண உதவும் என்பதால் வங்கிகள் இதற்குச் சம்மதித்தன.

சந்தையின் எதிர்பார்ப்பை உடைத்த அரசு

எல்ஐசி நிறுவனம் தனது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்ட பிறகே அரசு பங்கு விற்பனையைத் தொடங்கும் என்று சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அரசு அதற்கு மாறாக, நிதி முடிவுகள் வருவதற்கு முன்பே அதிரடியாக விற்பனையைத் தொடங்கியது. இந்தத் திடீர் நடவடிக்கை சந்தையை வியப்பில் ஆழ்த்தியது.

2.5% முதல் 6.5% வரை உயர்ந்த விற்பனை

அரசு முதலில் 2.5% பங்குகளை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்தது. முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தால் மேலும் 4% பங்குகளை விற்கும் கிரீன்ஷூ விருப்பத்தையும் தன் வசம் வைத்திருந்தது.

அரசு கணித்தது போலவே, பெரும் நிறுவன முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்க போட்டி போட்டனர். இதனால் அரசு தனது கூடுதல் 4% பங்கு விற்பனை உரிமையைப் பயன்படுத்தி, மொத்தம் 6.5% பங்குகளை விற்று ரூ.31,500 கோடியை வெற்றிகரமாகத் திரட்டியது.

செபி விதியை பூர்த்தி செய்த எல்ஐசி

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிப்படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10% பங்குகள் பொதுமக்களிடம் இருக்க வேண்டும்.

இந்த பங்கு விற்பனைக்கு முன் எல்ஐசியில் 3.5% பங்குகள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்தன. இந்த 6.5% பங்கு விற்பனையின் மூலம் பொதுமக்களின் பங்கு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2027-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டிய சட்டப்பூர்வ விதியை எல்ஐசி முன்கூட்டியே பூர்த்தி செய்துள்ளது.

எந்தவித குழப்பமும் இன்றி, திட்டமிட்டபடி இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனையை மத்திய அரசு ரகசியமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+