3 முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தாலும்! ரயில்வே துறை சார்ந்த பங்குகள் சரிவு! ஏன் என்னாச்சு?
டெல்லி: 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவுடன் ரயில்வே துறை சார்ந்த பங்குகள் சரிந்தன.
2024ஆம் ஆண்டுடன் பாஜக தலைமையிலான நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.

இந்த நிலையில் இன்றைய தினம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கிறதோ அந்த ஆட்சி சார்பில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் ரயில்வே துறை சார்ந்த திட்டங்களை அறிவித்திருந்தார். அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது: 40 ஆயிரம் சாதாரண ரயில்களின் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளும் நமோ பாரத் என்ற சேவைகளும் விரிவுப்படுத்தப்படும் என்றார்.
அத்துடன் முக்கிய பொருளாதார ரயில்வே வழித்தட திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி எரிசக்தி வழித்தடங்கள், கனிம வளம் வழித்தடங்கள், சிமெண்ட் வழித்தடங்கள், துறைமுக இணைப்புக்கான வழித்தடங்கள், அதிக போக்குவரத்து வழித்தடங்கள் உள்ளிட்டவை அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
ரயில்வே துறை சார்ந்த பங்குகள் சரிந்துவிட்டன. ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கக் கூடும் என எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் ஜனவரி மாதம் மத்தியில் பங்குகள் அதிகமாக இருந்தன.
இதையடுத்து ரயில் விகாஸ் நிகாமின் பங்குகள் 1.24 சதவீதம் குறைந்துவிட்டன. அது போல் இந்திய ரயில்வே நிதி கழகத்தின் பங்குகளும் இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகளும் 1.5 சதவீதம் குறைந்துவிட்டன. ரயில் டெல் கார்பரேஷனின் பங்குகள் 2.6 சதவீதம் சரிவடைந்தது. டெக்மேகோ ரயில் மற்றும் என்ஜீனியரிங்கின் பங்குகள் 1.2 சதவீதம் பங்குகள் குறைந்துவிட்டன.
சாலை வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்தபடியாக ரயில்வே துறை, விமான துறைக்கு பெரிய அளவிலான திட்டங்கள் இருக்கும் என நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. ஆனால் இன்றைய தினம் அவர் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திருந்தாலும் புதிய திட்டங்கள் ஏதும் இல்லாததாலும் பழைய சேவைகளையே மேம்படுத்தியதாலும் பங்குகள் குறைந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஓராண்டாக ரயில்வே துறை சார்ந்த பங்குகள் கணிசமாக உயர்ந்திருந்தன. இர்கான் இன்டர்நேஷனல் மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம், ரயில் விகாஸ் நிகம் போன்றவற்றின் பங்குகள் கடந்த ஓராண்டில் முறையே 300 சதவீதம், 400 சதவீதம், 936 சதவீதம் அதிகரித்திருந்தன என்பது குறிப்பிடப்பட்டது.












Click it and Unblock the Notifications