ஐபிசி பிரிவு 504-ன் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு.. சட்டம் என்ன சொல்கிறது?
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 504- கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது. இந்திய தண்டனை சட்டம் 504 சொல்வது என்ன? அதிகபட்ச தண்டனை எவ்வளவு என்ற விவரங்களை காணலாம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை வெளியிட்டு விமர்சித்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அவதூறு வழக்கு
குறிப்பாக ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இன்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு
ராகுல் காந்தி சூரத் வருகை தந்ததால் அவரை வரவேற்று அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பதாகைகளை வைத்து பிரம்மாண்ட வரவேற்பும் அளித்தனர். காங்கிரஸ் கட்சியினரின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ராகுல் காந்தி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பளித்த சூரத் மாவட்ட நீதிமன்றம், மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை
மேலும் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அவருக்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கியது. ராகுல் காந்தி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு (ஐபிசி செக்ஷன்) 504 -ன்கீழ் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

சட்டம் 504 சொல்வது என்ன?
இந்த சட்டப்பிரிவின் கீழ்தான் ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 504 சொல்வது என்ன? இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும் என்ற விவரங்களை பார்க்கலாம். 504- சட்டப்பிரிவு, "அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரையாவது வேண்டும் என்றே இழிவு படுத்துவது" என்பதை வரையறுக்கிறது.

சீண்டும் வகையில் நடந்து கொள்வது
இந்த பிரிவின் கீழ், யாரையாவது ஒருவரை வேண்டும் என்றே அவமதித்து அவரை சீண்டும் வகையில் நடந்து கொள்வது, ஒரு நபரை சீண்டும் வகையில் பேசுவதன் மூலம் அமைதிக்கு ஊறு ஏற்படும் என அறிந்தே அவரை சீண்டும் எண்ணத்துடன் பேசுதல் அல்லது வேறு ஏதேனும் குற்றங்களை செய்வது. இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க்க சட்டம் வழிவகை செய்கிறது. அல்லது இந்த இரண்டுமே அதாவது சிறை தண்டனை மற்றும் அபராதம் என சேர்த்து இரண்டும் விதிக்கப்படலாம். இந்த சட்டத்தின் கீழ் அதிபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.












Click it and Unblock the Notifications