புதுவை தவெக கூட்டத்தில் புஸ்சி ஆனந்தை லெஃப்ட் ரைட் வாங்கிய ஐபிஎஸ் ஈஷா சிங்.. திடீரென டெல்லிக்கு மாற்றம்
டெல்லி: புதுச்சேரியில் எஸ்எஸ்பியாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஈஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தவெக பொதுக்கூட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதாக ஈஷா சிங்கிற்கு பாராட்டு குவிந்தது குறிப்பிடத்தக்கது.
2 ஐபிஎஸ், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுவை ஐஜி அஜித்குமார் சிங்களா, ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வாலும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுவையில் விஜய்யின் மக்கள் சந்திப்பு
புதுவையில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான பிறகு, பொதுவெளியில் நடைபெற்ற விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு கூட்டமாக இது அமைந்தது.
இதனால், புதுவையில் இந்தக் கூட்டம் நடைபெற்றாலும் தேசிய அளவில் கவனம் பெற்றது. கூட்டத்திற்கு கடுமையான நிபந்தனைகளுடன் புதுவை அரசுஅனுமதி அளித்தது. கியூ ஆர் கோடு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி, 5 ஆயிரம் பேருக்கு மேல் வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளையும் புதுவை காவல்துறை தவெகவிற்கு விதித்து இருந்தது.
ஈஷா சிங்கிற்கு பாராட்டுகள்
தவெகவின் இந்த கூட்டத்திற்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இதனை சிறப்பாக கையாண்டு பாராட்டை பெற்றவர் காவல் அதிகாரி ஈஷா சிங். ஐபிஎஸ் அதிகாரியான ஈஷா சிங், பாஸ் இல்லாமல் தவெகவினரை அனுமதித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தையே கடிந்து கொண்டார்.
எதைப்பற்றியும் கவலைப்படமால் தனது பணியை சிறப்பாக செய்த ஈஷா சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்தன. புதுவையில் எஸ்.எஸ்.பியாக பணியாற்றிய ஈஷா சிங்கை டெல்லிக்கு மத்திய அரசு இடமாற்றம் செய்துள்ளது. ஈஷா சிங் மட்டுமின்றி மேலும் 2 ஐபிஎஸ், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
திடீரென டெல்லிக்கு இடமாற்றம்
புதுவை ஐஜி அஜித்குமார் சிங்களா, ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வாலும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரியான ஈஷா சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதுச்சேரி காவல் துறை பணியில் நியமனம் செய்யப்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் முதலில் புதுச்சேரி கிழக்கு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர், எஸ்எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. லஞ்ச ஒழிப்புத் துறையில் நியமனம் செய்யப்பட்ட ஈஷா சிங் தேங்கியிருந்த முக்கிய வழக்கை துரிதப்படுத்தினார். தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்ற ஈஷா சிங் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுவை தவெக கூட்டத்தில் நடந்தது என்ன?
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விஜய்யை பார்க்க முண்டியடித்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்து. இதில் 41 பேர் பலியாகிவிட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் ஒரு மாத காலமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
அதன்பிறகு, சுமார் 73 நாட்கள் கழித்து புதுவையில் பொதுவெளியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை ஏற்று இருந்த ஈஷா சிங், சிறப்பாக கூட்டத்தை கையாண்டார். விஜய்யை பார்க்க தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த தவெகவினர் சிலரை கியூ ஆர் கோடு இல்லாமலே, புஸ்சி ஆனந்த் அனுப்பினார்.
இதனை பார்த்த ஈஷா சிங், அவரிடம் இருந்து மைக்கை சட்டென பிடுங்கினார். மேலும் தவெக நிர்வாகி ஒருவர் "அங்குள்ள அனைவரையும் உள்ளே விடுங்கள்" என தெரிவித்ததால் டென்ஷன் ஆனார் ஈஷா சிங். பெண் போலீஸ் அதிகாரி கோபமடைந்து, அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தினார். "நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்கிறீர்களா, 40 பேர் இறந்திருக்கிறார்கள்" என ஆவேசமாக கர்ஜித்தார். ஈஷா சிங்கின் செயல்பாடுகள் பாராட்டை பெற்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆனார்.












Click it and Unblock the Notifications