மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய் திடீர் சஸ்பெண்ட்.. சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்தவர்
டெல்லி: சொராபுதீன் ஷேக் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்குகளை முதலில் விசாரணை நடத்திய மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய், உள்துறை அமைச்சகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டு குஜராத் ஐபிஎஸ் பேட்ஜ்சை சேர்ந்தவர் ரஜ்னீஷ் ராய். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் மத்திய டெபுடேஷன் மூலமாக பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் ரஜ்னீஷ் ராய், கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் இந்த விண்ணப்பம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்படவில்லை. இதையடுத்து அலுவலகம் செல்வதை திடீரென நிறுத்திவிட்டார் ரஜ்னீஷ் ராய்.
தொடர்ந்து அலுவலகம் வராததால் அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐஜி மற்றும் முதல்வர் பொறுப்பில் இருந்து அதிகாரப்பூர்வமில்லாமல் விலகி கொண்டு இருப்பதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதை ரஜ்னீஷ் கண்டித்துள்ளார். இந்த பணி இடைநீக்கம் என்பது சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு குஜராத் சிஐடி கிரைம் பிரிவில் டிஐஜியாக பணியாற்றியவர் ரஜ்னிஷ் ராய். சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் போலி என்கவுண்டர் வழக்குகளை விசாரணை நடத்தியவர் இவர். அப்போது, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்தார். இதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications