இந்தியாவுக்கு மிக பெரிய நஷ்டம். உலக கச்சா எண்ணெய் ஹைவே ஹார்முஸ் ஜலசந்தியை மொத்தமாக முடக்கும் ஈரான்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக உள்ள இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் அது இந்தியாவுக்கே மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுமே தற்போதைய சூழலில் மோதலை கைவிடுவதாக இல்லை. இந்த போர் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக மோதல் தொடங்கிய நாளே கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 8% உயர்ந்திருந்தது.

Iran Plans to Close Strait of Hormuz Threat to Global Oil Lifeline including India

ஹார்மூஸ் ஜலசந்தி

இப்போது இரு தரப்பு மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரித்துள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் அது கடல் வர்த்தகத்தை எப்படிப் பாதிக்கும்.. இதனால் இந்தியாவுக்கு எப்படி மிக மோசமான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே உள்ள முக்கியமான குறுகிய நீர் வழித்தடம் ஆகும். இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபியக் கடலுடன் இணைக்கிறது. இதை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதை என்றே அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் குறிப்பிடுகிறது. ஏனென்றால் சர்வதேச அளவில் நடக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகத் தான் செல்கிறது.

இந்தியாவுக்கு ஏன் முக்கியம்

அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்திய துறைமுகங்களை அடைகிறது. கத்தாரிலிருந்து வரும் இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதியும் கூட இந்த ஜலசந்தி வழியாகவே வருகிறது.

கச்சா எண்ணெய் நுகர்வில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. அதிலும் இந்தியா தனது தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமான தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்பியிருக்கிறது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி இயற்கை எரிவாயு இறக்குமதியும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தனது இயற்கை எரிவாயு தேவையில் கிட்டதட்ட பாதியை இந்தியா இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது.

இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி

இந்தியா இப்போது ரஷ்யாவிடம் இருந்து தான் கச்சா எண்ணெய்யை அதிகமாக வாங்குகிறது. ரஷ்யாவைத் தொடர்ந்து ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளன. இந்தியா மேலும் குவைத், கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதேநேரம் ஈரானின் எரிசக்தித் துறை அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் இருப்பதால் அங்கிருந்து மட்டும் இந்தியா நேரடியாக வாங்குவதில்லை.

கடந்த மே மாதம் இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யில் கிட்டத்தட்ட 47 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வந்துள்ளது. அந்தளவுக்கு இந்த ஜலசந்தி இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த சூழலில் திடீரென இதை ஈரான் மூடிவிட்டால் அது இந்தியாவுக்குப் பேராபத்தாகவே மாறும்.

என்ன நடக்கும்?

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை தவிர்க்கும் வகையில் எண்ணெய் ஏற்றுமதிக்கான குழாய் வடிவிலான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஆனால் ஜலசந்தி வழியாக ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால் அதற்கு முழுமையான மாற்றாக இவை இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இந்தியாவுக்குச் சிக்கல்!

இப்போது பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராக இருக்கிறது. மோதல் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 120 டால் வரை செல்லலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நேரத்தில் ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் அது கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தவே செய்யும். ஈரான் கடந்த காலங்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து மிரட்டல்கள் விடுத்தாலும் அதை மூடியது இல்லை. ஆனால், இந்த முறை மோதல் உச்சக்கட்டத்தில் இருப்பதால் ஈரான் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். அது இந்தியாவையும் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+