அனைத்துக் கட்சி தூதுக்குழு: காங்கிரஸ் அவமதிக்க முயற்சிக்கிறதா? சசி தரூர் கொடுத்த ரியாக்சன்
டெல்லி: அனைத்துக் கட்சி தூதுக்குழு தலைவராக காங்கிரஸ் எம்பி சசி தரூர் நியமிக்கப்பட்டதில் மத்திய அரசு மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னை அவமதிக்க முயற்சிக்கிறதா என்ற கேள்விக்கு சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு என்னை அழைத்ததில் எந்த வித அரசியலும் இருந்ததாக தெரியவில்லை. என்னை யாரும் அவமதிக்க முடியாது என்று பதில் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, பாகிஸ்தான் பயங்கராவதிகள் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் மீதான நடவடிக்கைகள் உலக அளவில் கவனம் பெற்ற நிலையில், பாகிஸ்தானின் மீதான தாக்குதல் நடவடிக்கையை ஏன் இந்தியா மேற்கொண்டது, எதற்காக இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு நேரில் சென்று விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக எம்பிக்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், தூதர்கள் அடங்கிய 7 அனைத்துக்கட்சி குழுக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர், ஸ்ரீகாந்த் ஷிண்டே, கனிமொழி, பைஜயந்த் பாண்டா, சுப்ரியா சுலே, ரவிசங்கர் பிரசாத், சஞ்சய் குமார் ஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்கள் யாரையும் தேர்ந்தெடுக்காமல் காங்கிரஸ் எம்பி சசி தரூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. வெளிநாடு செல்லும் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற பரிந்துரைக்கும் எம்பிக்களின் பெயரை கட்சி வாரியாக மத்திய அரசு கேட்டிருந்ததற்கு, காங்கிரஸ் கட்சி 4 எம்பிக்கள் பெயர்களை பரிந்துரை செய்தது.
ஆனந்த் ஷர்மா, கவுரவ் கோகாய், சையது நசீஸ் ஹூசைன், ராஜ் ப்ரார் ஆகியோரின் பெயர்களை மட்டுமே காங்கிரஸ் பரிந்துரை செய்த நிலையில், அவர்களில் இருந்து யாரையும் தேர்ந்தெடுக்காமல், காங்கிரஸ் சொல்லாத சசிதரூர் பெயரை மத்திய அரசு தேர்வு செய்தது. இதனால் காங்கிரஸ் கட்சி கடும் கோபமடைந்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறதா என்று சசி தரூர் எம்பியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறுகையில், இது பற்றி நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) தான் கேட்க வேண்டும். அவ்வளவு எளிதில் என்னை யாரும் அவமதிக்க முடியாது. எனக்கும் மதிப்பு இருக்கிறது. மத்திய அரசு என்னை அழைத்ததில் எந்த வித அரசியலும் இருந்ததாக தெரியவில்லை.
நாட்டுக்காக நான் இந்த அழைப்பை ஏற்று இருக்கிறேன். மத்திய அரசு என்னை அழைத்தது பற்றி கட்சியிடம் நாம் கூறினேன். முன்னதாகவே வெளியுறவுத்துறையில் எனக்கு சில அனுபவங்கள் இருப்பதனால் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதுபற்றி என்னிடம் பேசினார். நான் அப்போதே வெளிநாடு சென்று விளக்கம் அளிக்க ஒப்புக்கொண்டு விட்டேன்.
காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது பற்றி எனக்கு யாரும் கூறவில்லை. இது கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையிலானது. நாடு இருந்தால் தான் அரசியல் இருக்கும். நாம் அனைவரும் இந்தியர்கள். நாடு நெருக்கடியில் இருக்கும் போது, அவர்கள் ஒருவரது உதவியை தேடும் போது நீங்கள் வேறு என்ன பதிலை சொல்வீர்கள்.
பாகிஸ்தான் மீது நாம் தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் பார்த்துள்ளன. எனவே உலக நாடுகள் நம் நாட்டை பற்றி என்ன நினைக்கும் என்று இந்த நேரத்தில் நாம் நினைத்து பார்க்க வேண்டும். அதில் நம்முடைய பங்கு இருக்க வேண்டும். தேச நலன் என அந்த உணர்வில் தான் இதற்கு நான் ஒப்புக் கொண்டு உள்ளேன். தேசத்திற்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன். நாம் இந்த நேரத்தில் ஒற்றுமையாக ஒரே குரலில் பேசுவது நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும், இது மத்திய அரசின் நேர்மையற்ற செயல் என்றும் விமர்சித்து இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்காரராக இருப்பதற்கும், காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications