நம் ராணுவத்தையே கண்ட்ரோல் பண்ண துடிக்கும் டிரம்ப்! எஃப் 35 போர் விமான ஆஃபரின் திடுக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கு 5ம் தலைமுறை வகையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம், அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இது நல்ல ஆஃபர் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் எஃப் 35 ரக போர் விமானத்தின் ஆஃபர் மூலம் நம் நாட்டு விமானப்படை மட்டுமின்றி மொத்த ராணுவத்தையும் கண்ட்ரோல் பண்ண டொனால்ட் டிரம்ப் துடிப்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

எஃப் 35 ரக போர் விமானத்தின் ஆஃபர் வழியாக அமெரிக்காவால் எப்படி நம்நாட்டு ராணுவத்தை கண்ட்ரோலில் எடுக்க முடியும்? என்ற கேள்வி உங்களுக்கு இப்போது எழலாம். அதற்கான விடையையும், அமெரிக்காவின் எப்ஃ35 ரக போர் விமானத்தை இந்தியா வாங்குவதால் ஏற்படும் பெரிய பிரச்சனையையும் இங்கு பார்க்கலாம்.

America India F 35 fighter jet

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். கடந்த 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். இருவரும் இரு நாடுகளின் உறவு, வர்த்தகம் பற்றி பேசினார். அப்போது டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு முக்கிய ஆஃபரை வழங்கினார்.

எஃப் 35 ரக போர் விமானம்

அதுதான் 5ம் தலைமுறை வகையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானம். அதாவது அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானமாக உள்ள எஃப் 35 ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். நம் நாட்டை பொறுத்தவரை இன்னும் 5ம் தலைமுறை விமானம் என்பது பயன்பாட்டில் இல்லை. ரஃபேல் எனும் 4.5ம் தலைமுறையை சேர்ந்த விமானம் தான் நம் நாட்டின் சக்தி வாய்ந்த விமானமாக உள்ளது. இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் 5ம் தலைமுறையை சேர்ந்த எப்ஃ35 ரக போர் விமானத்தை நம் நாட்டுக்கு தருவதாக அறிவித்தார். இந்த ஆஃபர் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே இன்னும் ஒப்பந்தம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் ஆஃபரை இந்தியா பரிசீலனை செய்ய தொடங்கி உள்ளது.

அமெரிக்காவா ? ரஷ்யாவா?

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நம் நாட்டுக்கு ரஷ்யாவிடம் இருந்து தான் 5ம் தலைமுறை விமானம் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் டிரம்பின் ஆஃபர் இந்தியாவை அமெரிக்கா பக்கம் திரும்ப செய்துள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானத்தை வாங்குவதா? இல்லாவிட்டால் நம் நாட்டின் நெருங்கிய தோழனாக இருக்கும் ரஷ்யாவிடம் இருந்து 5ம் தலைமுறை வகையை சேர்ந்த சுகோய் சு-57 ரக போர் விமானத்தை வாங்குவதா? என்பது பற்றி இந்தியா பரிசீலனையில் உள்ளது. இதில் ஒரு தரப்பினர் நம் நாட்டுக்கு அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்கள் தான் வேண்டும் என்று அமெரிக்காவின் ஆஃபருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

நிபுணர்கள் கருத்து

இதற்கு நிபுணர்கள் கூறும் காரணங்கள் என்னவென்றால் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்கள் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. நம் நாட்டிலும் போர் விமானங்கள் பற்றாக்குறையாக உள்ளது. ரஷ்யா இப்போது உக்ரைனுடன் போரிட்டு வருகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இல்லை. இதனால் ரஷ்யாவின் போர் விமானங்கள் நமக்கு கிடைக்க காலதாமதமாகலாம். சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நமக்கு மிரட்டலாக உள்ளன. இதனால் எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்குவது தான் சரி என்று கூறுகின்றனர்.

அதேவேளையில் இன்னொரு தரப்போ ரஷ்யாவின் சுகோய் சு -57 ரக போர் விமானத்தை தான் நம் நாடு வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு அவர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றன. அதன்படி நமக்கு அதிகமான போர் விமானம், ராணுவ தளவாடங்களை ரஷ்யா தான் தருகிறது. இதனால் அமெரிக்காவின் போர் விமானங்களை விட்டுவிட்டு ரஷ்யாவிடம் தான் வாங்க வேண்டும்

மேலும் ரஷ்யாவின் தொழில்நுட்பங்களை ஓரளவு நம் நாட்டு படை வீரர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதேபோல் எஃப் 35 ரக போர் விமானங்களை ஒப்பிடும்போது ரஷ்யாவின் சுகோய் சு - 57 ரக போர் விமானஙகள் விலை குறைவு. அதேவேளையில் எப்ஃ35 ரக போர் விமானங்களை போல் எதிரிகளுக்கு சுகோய் சு - 57 போர் விமானங்கள் சிம்ம சொப்பணமாக விளங்குகின்றன என்று காரணங்களை அடுக்கி வருகின்றன. இதனால் நம் நாட்டுக்கு அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றில் எந்த நாட்டின் போர் விமானங்களை வாங்குவது என்பதில் குழப்பம் உள்ளது.

ராணுவத்தை கட்டுப்படுத்தும் டிரம்ப்?

இத்தகைய சூழலில் தான் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கினால் ஏற்படும் சிக்கல் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அந்த விமானத்தை இந்தியா வாங்கும்போது எஃப் 35 ரக போர் விமானத்தின் மூலம் விமானப்படை மட்டுமின்றி நம் நாட்டு ராணுவத்தையே கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருகிறாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானத்தை அமெரிக்காவின் லாக்ஹிட் மார்ட்டின் எனும் நிறுவனம் தான் தயாரித்து வழங்கி வருகிறது. இந்த விமானம் மிகவும் சக்திவாய்ந்தது. மிகவும் பாதுகாப்பானது. எதிரிகளின் ரோடாரில் சிக்காமல் ஆபரேஷன்களை கட்சிதமாக முடித்து தரும் திறன் எஃப் 35 ரக போர் விமானத்துக்கு உள்ளது என்று அமெரிக்கா கூறி வருகிறது.

ஏவுகணை பிரச்சனை

இது அனைத்தும் உண்மை தான். ஆனால் இந்த விமானம் என்பது அமெரிக்காவுக்கு மட்டுமே பெரிய அளவில் பலனளிக்கும். மாறாக பிற நாடுகள் இந்த விமானத்தை பயன்படுத்தும்போது சிக்கலை தான் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது பொதுவாக ஒரு போர் விமானம் தயாரிக்கப்படும்போது தங்களின் நாட்டு பாதுகாப்பை மனதில் வைத்து தான் உருவாக்கப்படும்.

அப்படித்தான் இந்த போர் விமானத்தையும் அமெரிக்கா உருவாக்கி உள்ளது. உதாரணமாக எஃப் 35 போர் விமானம் நாம் உள் நாட்டிலேயே தயாரித்த சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்துவதும் கடினம். நேட்டோ நாடுகள் வசம் இருக்கும் ஏவுகணைகளை மட்டுமே இதில் பொருத்தும் வகையில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஏவுகணை தேவை

உதாரணமாக நம் நாட்டில் பயன்படுத்தில் உள்ள பிரேமாஸ் ஏவுகணை மற்றும் SCALP ஏவுகணைகளை எஃப் 35 ரக போர் விமானத்தால் சுமந்து சென்று தாக்க முடியாது. இதனால் போர் விமானத்தை பயன்படுத்தும் போது அதற்கு தேவையான ஆயுதங்களையும் அமெரிக்காவிடம் வாங்க வேண்டிய நிலை வரும்.

இல்லாவிட்டால் நம் நாட்டில் உள்ள ஏவுகணையை சுமந்து செல்லும் வகையில் விமானத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு கூடுதல் நிதி செலவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, அமெரிக்காவின் அனுமதி என்பது கட்டாயம் வேண்டும். மேலும் எப் 35 ரக போர் விமானத்தின் சாப்ட்வேரை கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ, மேம்படுத்தவோ நம்மால் முடியாது. அதை தயாரித்த அமெரிக்க நிறுவனத்தால் தான் முடியும். அந்த நிறுவனத்தின் தயவு இல்லாமல் இவை எதுவும் நடக்காது.

கட்டுப்படுத்தும் உரிமை

மேலும் இந்த போர் விமானத்தை பிற நாடுகளுக்கு வழங்கினாலும் அதனை கட்டுப்படுத்தும் உரிமை என்பது அமெரிக்காவே வைத்திருக்குமாம். அதாவது இந்த போர் விமானத்தின் சில செயல்பாடுகளை மட்டுமே இந்தியாவால் செய்ய முடியும். பெரும்பாலான செயல்பாடுகள் என்பது அமெரிக்காவின் பாதுகாப்பு துறை மற்றும் விமானத்தை தயாரித்த தயாரித்த நிறுவனத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன.

அதாவது, அமெரிக்க ராணுவத்தில் Autonomic Logistics Information System என்று ஒரு அமைப்பு உள்ளது. இந்த சிஸ்டமில் தான் எஃப் 35 ரக போர் விமானத்தின் செயல்பாடுகள் இணைக்கப்ட்டுள்ளது. எஃப் 35 ரக போர் விமானங்களை நாம் வாங்கிய பிறகும் கூட இந்த சிஸ்டம் வழியாக தான் விமானங்களை இயக்குவது, கட்டுப்படுத்துவது, ஆப்பரேஷன் திட்டம் வகுப்பது போன்ற முக்கியமான செயல்பாடுகளை செய்ய முடியும். இதனால் அமெரிக்காவின் உதவியின்றி எந்த ரகசிய ஆபரேஷன்களையும் செய்ய முடியாது. அதுபற்றிய தகவல்கள் அமெரிக்காவால் கண்காணிக்க முடியும். இது நம் நாட்டின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் - பிரிட்டன் சந்தித்த பிரச்சனை

மேலும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பின் நாடுகள் பலவும் எஃப் 35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவால் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக கூற வேண்டும் என்றால் அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள இஸ்ரேலை சொல்லலாம். இஸ்ரேலுக்கு கூட எஃப் 35 ரக போர் விமானத்தால் கசப்பான அனுபவம் உள்ளது. அது என்னவென்றால் அமெரிக்கா உதவியுடன் எஃப் 35 ரக விமானங்களை பொறுத்தவரை இஸ்ரேலால் தன்னிச்சையாக சில விஷயங்களை செய்ய முடிகிறது. இருப்பினும் பராமரிப்பு பணி மற்றும் ஆபரேஷன் டாஸ்குகளுக்கு இன்னும் அமெரிக்காவை நம்பி தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் இந்தியாவும் இந்த வகை போர் விமானங்களை வாங்கினால் நம் நாடும் அமெரிக்காவையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். அடுத்ததாக பிரிட்டன் சந்தித்த பிரச்சனையை பார்க்கலாம். குயின் எலிசபெத் விமானம் தாங்கி கப்பலில் எஃப் 35 போர் விமானத்தை நிலை நிறுத்த பிரிட்டன் முயற்சி செய்தது. ஆனாஎல் அதை அமெரிக்காவின் சிஸ்டம் தடுத்ததாக பிரிட்டன் கவலை தெரிவித்தது.
அதேபோல் ஆஸ்திரேலியாவும் பிரிட்டன், இஸ்ரேல் போல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

ரகசிய ஆபரேஷன்களுக்கு சிக்கல்

இதனால் எஃ35 ரக போர் விமானத்தை நம் நாடு வாங்கும் பட்சத்தில் அதில் அமெரிக்காவின் தலையீடு என்பது அதிகமாக இருக்கும். நமது ராணுவ நடவடிக்கைகளை நேரடியாக அமெரிக்கா கண்காணிக்கும் அபாயம் உண்டு. போர் விமானங்களின் ஒவ்வொரு செயல்பாடும் அமெரிக்காவில் நோட்டமிடப்படும். எஃப் 35 ரக போர் விமானங்களை வைத்து நம்மால் எந்த விதமான ரகசிய ஆபரேஷன்களையும் மேற்கொள்ள முடியாது.

அனைத்து ஆபரேஷன்களையும் அமெரிக்க அறிந்து கொள்ளும். நம் நாடு ஒரு ஆபரேஷனை திட்டமிட்டு மிகவும் ரகசியமாக நடத்தப்போகிறது என்றால், அதுபற்றிய தகவல்களை அமெரிக்காவால் அறிந்து கொள்ள முடியும். இதனால் நம் ஆப்ரேஷனில் தலையிட்டு திட்டத்துக்கு முட்டுக்கட்டை அமெரிக்கா உருவாக்கும் நிலை உள்ளது.

இதனால் பல நூறு கோடிகளை கொடுத்து எஃப் 35 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கினாலும் அதனை அமெரிக்கா தலையீடு இன்றி பயன்படுத்த முடியாது என்கின்றனர் நிபுணர்கள். படையப்பா படத்தில் ஒரு வசனம் வரும். ‛‛ மாப்பிள்ளை அவரு தான் ஆனால் அவர் போட்டு இருக்கும் சட்டை என்னோடது'' என்று நடிகர் செந்திலுக்கு பெண் பார்க்க செல்லும் காட்சியில் வசனம் வரும். அதில் செந்தில், நடிகர் ரஜினிகாந்தின் சட்டையை ஓசியில் வாங்கி அணிந்து கொள்வார். செந்திலை பற்றி பலரும் கேட்கும்போது ரஜினிகாந்த் ‛‛மாப்பிள்ளை அவர் தான். அவர் போட்டு இருக்கும் சட்டை என்னோடது'' என்பார்.

வீடு நம்மிடம் சாவி அமெரிக்காவிடம்

ஆனால் இங்கே எஃப் 35 போர் விமானங்களை கோடிகளை கொட்டி இந்தியா வாங்கினாலும் கூட ‛‛எஃப் 35 ரக போர் விமானத்தை இந்தியா தான் வைத்திருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகள் அனைத்தையும் நாங்கள் தான் கட்டுப்படுத்துவோம்'' என்கிறது அமெரிக்கா. இன்னும் புரியும்படி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் புதிதாக கட்டிய வீட்டை நம்மிடம் தந்துவிட்டு சாவியை அமெரிக்கா வைத்து கொள்வது என்று கூறலாம்.

இதனால் அமெரிக்கா இன்றி எஃப் 35 விமானத்தின் மூலம் நம் நாடு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்கின்றனர் நிபுணர்கள். இதனால் எப்ஃ35 போர் விமான விவகாரத்தில் இந்தியா யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நம் நாட்டின் விமானப்படை மட்டுமின்றி ராணுவத்தின் சுதந்திரத்தை முற்றிலும் கேள்விக்குறியாக்கி விடும் என்கின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+